இதை கேட்ட சி ஷு மகிழ்ச்சி பொங்க, "மிகவும் நல்லது அரசே, இனி நாங்கள் எதற்கும் பயப்படத்தேவையில்லை" என்று கூறி, தலைகுனிந்து வணங்கி அரசன் ஃபூ சாய்க்கு நன்றி கூறினாள். தனது பேரழகும், சொல்வன்மையும் கைகொடுக்க, நாளடைவில் தன் கைகளாலேயே அரசன் ஃபூ ச்சாய்க்கு உணவூட்டும் அளவுக்கு நெருக்கமாகினாள் சி ஷு. அரசன் ஃபூ ச்சாய் அவளை இரவும் பகலும் தன் அருகிலேயே வைத்திருந்தான். அழகு மட்டுமே இருந்தால் ஒருவேளை அரசனுக்கு சலித்துப்போயிருக்கும். ஆனால் சி ஷு அறிவும், அரசியல் நுட்பமும் தொனிக்க பேசும் ஆற்றல் கொண்டவள் என்பதால் அரசனை தன் கைக்குள் போட்டுக்கொண்டாள். ஒருமுறை அரசனிடம் பேசுகையில், அரசே உலக நடப்பு உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். ச்சு நாடு இன்னும் தோலிவியிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறது. ஜின் நாட்டின் வல்லரசுத்தன்மையும் பழங்கதையாகிப் போய்விட்டது. ச்சி நாட்டில் அதன் தலைமையமைச்சர் யான் யிங் இறந்த பிறகு அங்கே பெயர் சொல்லும் படி யாரும் பெரிய ஆட்கள் இல்லாத நிலை. லூ நாட்டிலோ மூன்று அமைச்சர்கள் அணிதிரண்டு அந்நாட்டு கோமகனை கைப்பாவையாக்கி ஆட்சியை நடத்துகின்றனர். சீன நாட்டின் மத்திய சமவெளியில் இப்போது உங்களுக்கு இணையாக யாரும் இல்லை. இந்த நிலையில், நீங்கள் என்னுடனே உங்கள் நேரத்தை கழித்து, ஆட்சியை வலிமைப்படுத்தாமல் இருந்தால், உங்கள் பலமும், ஆற்றலும் குறைவதற்கு மக்கள் என்னைத்தானே பழி சொல்வார்கள். உங்கள் குடும்பத்தின் பெயருக்கு புகழ் சேர்க்கவோ இல்லையோ, என் பொருட்டேனும் மத்திய சமவெளியின் பேரரசனாக மாற நீங்கள் முயற்சிக்கத்தான் வேண்டும். உங்கள் மாட்சியை பகிர்ந்துகொள்ள நான் எவ்வளவு ஏங்குகிறேன் என்பது உங்களுக்கு தெரியுமா? என்றாள். இந்த வார்த்தைகள் அரசன் ஃபூ ச்சாயை வியப்பும், பெருமையும் அடையச் செய்தன. சி ஷுவின் வார்த்தைகளில் தெரிந்த பெருமைக்குரிய அம்சங்கள் அவன் கண்களுக்கும் ஒளிவீசி மினுமினுக்க, மத்திய சமவெளியின் ஆட்சியை கைப்பற்ற இனி முனைப்புடன் முயற்சிக்க சி ஷுவிடம் உறுதியளித்தான் ஃபூ ச்சாய்.
|