வூ என்ற நாட்டை வெல்ல யுவே நாட்டு மன்னனுக்கு உதவிய பேரழகி சி ஷுவை பற்றிய கதை. வூ நாட்டு அரசனை ஒருவழியாக தன் கைக்குள் போட்டுக்கொண்ட சி ஷு, அவனை மத்திய சமவெளியெங்கும் சிறந்த அரசனாக, பெரும் ஆற்றல் கொண்டவனாக மாறுமாறு மந்திரம் ஓதினாள். இதற்கு பின்னணியிலான காரணம் என்னவென்றால், இப்படி வூ நாடு அரசன் ஃபூ ச்சாய் அங்குமிங்கும் போரெடுத்து ஆள்பலத்தையும், படையாற்றலையும் விரையப்படுத்தினால், தனது நாடான யுவே நாட்டின் மன்னன் எளிதில் படையெடுத்து வூ நாட்டு அரசனை போரில் வீழ்த்தி பழி தீர்த்துக்கொள்ளலாம் என்பதே. இந்த நோக்கத்தை அறியாத வூ நாட்டு அரசன் ஃபூ ச்சாய், சி ஷு தன் மீதான் காதலாலும், தான் வலியவனாய், பேராற்றல் கொண்டவனாய் மாறவேண்டும் என்ற ஆர்வத்தால் சொல்கிறாள் என்று நம்பினான்.
இதனிடையில் சி ஷுவுடன் இணைந்து வூ நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட அவளது கிராமத்தை சேர்ந்த தோழி ஷெங் தான் நோய்வாய்ப்பட்டாள். காய்ச்சல் தீவிரமாக, தோழியை கண்ட சி ஷு, அன்புச் சகோதரியே, உன் உடல் நலத்தை சீரழித்துக்கொள்ளாதே, இந்த வூ நாட்டு அரசன் தோல்வியால் வீழ்ச்சியடையும் வரை நாம் உயிருடன் இருக்கவேண்டும். அதன் பின் நான் சொந்த ஊரான ஷுலோ கிராமத்துக்கு திரும்பலாம்" என்று ஆறுதல் கூறினாள். அப்போது அரசன் ஃபூ ச்சாய் அவளை அழைப்பதாக செய்தி வர, புறப்பட்ட சி ஷுவை பார்த்து, கண்ணீருடன் ஷெங் தான் " அன்பு சகோதரி சி ஷு, என்னை மறந்துவிடாதே. உன்னை தவிர இங்கு எனக்கு நட்போ சொந்தமோ யாருமில்லை. நீ மனவுறுதி கொண்டவள். உன்னை கண்டு நான் பெருமைப்படுகிறேன். ஆனால் யுவே நாட்டு மன்னனால் நிர்க்கதியாக்கப்பட்டு நம்முடைய இளமைப்பருவம் இந்த வூ நாட்டு அரசனால் அழிக்கப்படுகிறது என்று கூறியபடியே அழுகையும், இருமலுமாக புலம்ப, வாயிலிருந்து ரத்தம் வெளியேறியது. அதன் பின் ஷெங் தானின் உடல்நலம் மேலும் மோசமாகி, சில திங்கள் காலத்தில் அவள் இறந்துபோனாள். அரசன் ஃபூ ச்சாய் சி ஷுவின் அழகிலும், அறிவிலும் மயங்கியிருந்தான் என்றாலும், சி ஷுவின் தோழியான ஷெங் தான் மீது அவனுக்கு ஒரு வித அன்பு கலந்த நேசமிருந்தது. அவள் மகிழ்ச்சியடைய அவன் பல செயல்களை செய்த போதும், ஷெங் தான் அவனை மனதில் ஏற்க மறுத்தாள். சி ஷுவை போல் ஷெங் தானுக்கு அரசனை ஏய்த்து, தன் வழியில் வரச் செய்ய இயலவில்லை. இந்த நிலையில் ஷெங் தான் இறந்தது, அரசன் ஃபூ ச்சாய்க்கு கொஞ்சம் சோகமாகத்தான் இருந்தது. எளிய அந்த பெண் இறந்தது குறித்து அவன் கொஞ்சம் வாடத்தான் செய்தான். அவளது உடலை ஹுவாங்மாவ் எனும் மலையில் அடக்கம் செய்ததோடு, ஒரு சிறிய நினைவாலயத்தையும் எழுப்பினார் அரசன் ஃபூ ச்சாய்.
தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்த, தன் தோழியான ஷெங் தான் இவ்வளவு காலம் தன்னோடு இருந்தது சி ஷுவுக்கு ஆறுதலும், தேறுதலுமாக இருந்ததோடு, மனதின் வலிமைக்கு உதவியது. ஆனால் ஷெங் தான் இறந்த பிறகு, தன் நாடான யுவே நாட்டின் மன்னன் அளித்த கடமையான வூ நாட்டு அரசனை வழுக்கி விழச்செய்து, அவனை தோல்விக்கு வழிகாட்ட உதவும் கடமை, சுமை முழுக்க சி ஷுவின் தோளில் விழுந்தது. ஆனால், யுவே நாட்டு மன்னனுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்ற வேறு வழியின்றி, சோர்வுற்றுக்கிடந்த அரசன் ஃபூ ச்சாயை ஷெங் தானின் இறப்பால் ஏற்பட்ட சோகத்திலிருந்து மீளச் செய்தாள். பிறகு அரசன் ஃபூ ச்சாயை அண்டை நாடுகளுடன் மோதி தன் வலிமையை காட்டும்படி அறிவுறுத்தினாள். அண்டை நாடுகளுடன் போரிட்டு படை பலத்தை வீணாக பலவீனமாக்கி, விரையம் செய்தால் அது யுவே நாட்டு மன்னனுக்கு, அதாவது தன் மன்னனுக்கு வூவை வெல்ல உகந்த ஒரு சூழலை உருவாக்கும் என்பதுதான் சி ஷுவின் திட்டம்.
|