இன்னொரு சுவையான சீன உணவு வகை
cri
வாணி -- வணக்கம், சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. க்ளீட்டஸ் -- வணக்கம், எங்களுடன் சேர்ந்து சுவையான சீன உணவு வகைகளைத் தயாரிக்க கற்றுக் கொள்ளுங்கள். வாணி -- க்ளீட்டஸ், ஏப்ரல் திங்கள் தமிழ்ப் பிரிவின் பணியாளர்கள் தியே ச்சின் மாநகருக்குச் சென்று ஒரு நாள் பயணம் மேற்கொண்டோம். க்ளீட்டஸ் -- ஆமாம். தமிழன்பனும் அவரது மனைவியும் தங்களுடன் அங்கே சென்றனர். வாணி -- சீனாவில் நடுவண் அரசின் நேரடி ஆட்சியின் கீழுள்ள 5 மாநகரங்களில் தியேன் ச்சின் மாநகரம் ஒன்றாகும். இது பெய்ஜிங்கின் பக்கத்தில் அமைந்துள்ளது. கார் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் அங்கே சென்றடையலாம். க்ளீட்டஸ் -- அந்நகரில் எந்தெந்த இடத்துக்குச் சென்றீர்கள்? வாணி -- வூ தா தௌ எனும் முன்னாள் வெளிநாட்டு வாடகை வீடுகள் குழுமி அமைந்த பகுதிக்குச் சென்றோம். தவிர, முன்னாள் சீனத் தலைமை அமைச்சர் சோ என் லாய் தம்பதியரின் நினைவகத்தை பார்வையிட்டோம். க்ளீட்டஸ் -- நீங்கள் சொன்னதைப் பார்த்தால் தியேன் ச்சின்னில் ஒரு நாள் பயணம் மட்டும் போதாது என்று நினைக்கின்றேன். வாணி -- ஆமாம், இன்றைய நிகழ்ச்சியில் தியேன் ச்சினின் தனிச்சிறப்பு வாய்ந்த ஓர் உணவு வகை பற்றி அறிமுகப்படுத்த விரும்புகின்றேன். க்ளீட்டஸ் -- தமிழன்பனிடம் இது பற்றி கேட்டேன். வாணி -- ஆமாம். எமது நிகழ்ச்சியில் இதன் தயாரிப்பு முறை பற்றி கூற வேண்டும் என்று அவர் தான் முன்மொழிந்தார். க்ளீட்டஸ் -- அப்படியா, அதன் பெயரை முதலில் தெரிவிக்கவும். வாணி -- அதன் சீனப் பெயர் geda tang. க்ளீட்டஸ் -- தேவையான பொருட்கள் பற்றி கூறுங்கள். வாணி -- சரி. தக்காளி 1 முட்டை 2 கோதுமை மாவு 100 கிராம் நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி உப்பு 2 கிராம் சமையல் எண்ணெய் 4 தேக்கரண்டி
வாணி -- இன்று ஒரு பெரிய பாத்திரம் தேவைப்படுகின்றது. இதில் கோதுமை மாவைக் கொட்டுங்கள். பிறகு, மிக மெல்லிய குழாய் நீர் ஓட்டத்தில், பாத்திரத்திலுள்ள கோதுமை மாவை ஒரு திசை நோக்கி கிளறுங்கள். க்ளீட்டஸ் -- நேயர்களே, இது மிக முக்கியமான செயல்பாடு, கவனிக்கவும். மிக மெல்லிய நீர் ஓட்டத்தில் நீங்கள் விரைவாக ஒரு திசை நோக்கி மாவை கிளற வேண்டும். இப்போது, பாத்திரத்திலுள்ள கோதுமை மாவு மிகச் சிறிய அளவாக மாறிவிடும். இது தான் geda. வாணி -- தக்காளியைச் சுத்தம் செய்யுங்கள். பிறகு, அதனை சிறிய அளவாக நறுக்கிக்கொள்ளுங்கள். க்ளீட்டஸ் -- முட்டைகளை உடைத்து மற்றொரு பாத்திரத்தில் கொட்டி, நன்றாக அடித்து கிளறிக்கொள்ளுங்கள். வாணி -- வாணலியை அடுப்பின் மீது வைத்து, சமையல் எண்ணெயை ஊற்றவும். சில வினாடிகளுக்குப் பின், தக்காளியை இதில் கொட்டி, வதக்கவும். க்ளீட்டஸ் -- அடுத்து, வாணலியில் 200 மில்லி லிட்டர் நீரை ஊற்றி வேகவிடுங்கள். வாணி -- நீர் கொதித்த பின் குறைவான சூட்டில் கோதுமை gedaவை வாணலியில் கொட்டி, வேக வையுங்கள். க்ளீட்டஸ் -- வேகவைக்கும் போது, மறவாமல் வாணலியிலுள்ள அனைத்தையும் ஒரு திசையில் கிளறுங்கள். வாணி -- இறுதியில், வாணலியில் முட்டைகளை ஊற்றவும். உப்பு, நல்லெண்ணெய் ஆகியவற்றை அதில் சேர்க்கலாம்.
க்ளீட்டஸ் -- அன்பு நேயர்களே, இன்றைய geda tang தயார். வாணி -- இன்றைய உணவு வகை சுவையானது. பார்ப்பதற்கும் அழகானது. க்ளீட்டஸ் -- ஆமாம், கோதுமை gedaவின் வெள்ளை, தக்காளி பழத்தின் சிவப்பு, முட்டையின் மஞ்சள்... வாணி, இதில் கொத்த மல்லியை சேர்க்கலாமா? வாணி -- கண்டிப்பாக, பச்சை நிறமும் கிடைக்கலாம். நல்லது. க்ளீட்டஸ் -- நேயர்களே, இந்த உணவு வகை மிகவும் சுவையானது. ஒரு வயதுடைய குழந்தைகளும் இதைச் சாப்பிடலாம். வாணி -- சரி, நேயர்களே, எமது நிகழ்ச்சியைக் கேட்ட பிறகு, வீட்டில் சுவையான geda tangஐ தயாரித்து ருசிப்பார்க்கலாம். க்ளீட்டஸ் -- வான் மற்றும் மின்னஞ்சல் மூலம் சீன உணவு வகைகளை தயாரிக்கும் தங்கள் அனுபவங்களை எங்களுடனும் இதர நேயர்களுடனும் பகிரந்து கொள்வதை வரவேற்கின்றோம்.
|
|