• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-26 10:24:47    
அழகி சி ஷு

cri

வூ என்ற நாட்டை வெல்ல யுவே நாட்டு மன்னனுக்கு உதவிய பேரழகி சி ஷுவை பற்றிய கதை.
என்றாவது ஒரு நாள் யுவே நாட்டினர் படையெடுத்து வூ நாட்டை அழிக்கப்போவது உறுதி என்று தன் எதிர்ப்பை வெளிப்படுத்திய அமைச்சர் வூ ஸிசியுவை ஆசை நாயகி சி ஷுவின் பேச்சைக் கேட்டு அவரது உயிரையே பலியாக கேட்டு ஒரு தூதுவனிடம் வாள் கொடுத்து அனுப்பினான் வூ நாட்டு அரசன் ஃபூ ச்சாய். அரசனின் எண்ணத்தை உணர்ந்த அமைச்சர் வூ ஸிசியு, நான் இறந்த பின் என் கண்களை பிடுங்கி நகரத்தின் வாயிலில் மாட்டுங்கள். யுவே நாட்டின் படைகள் இங்கே போரெடுத்து வருவதை நான் பார்க்கவேண்டும்" என்று கூறி, வாளால் தன் சங்கை அறுத்துக்கொண்டு உயிர்துறந்தார்.


ஆசை நாயகி சி ஷுவின் உள்ளத்தை மகிழ்விக்க அவளுக்காக ஒரு பெரிய மாளிகையை கட்டினான் அரசன் ஃபூ ச்சாய். நாளும், பொழுதும் அவள் மடியில் கிடந்தான். இதனிடையில் கூசு என்ற மலையில் ஒரு மாளிகையை கட்ட ஃபூ ச்சாய் திட்டமிட்டபோது, யுவே நாட்டு மன்னன் குவோ ஜியன், பெரிய பெரிய மரங்களை வெட்டி பரிசாக அனுப்பி வைத்தான். தேவைக்கு அதிகமான நீளம் கொண்ட அந்த மரத்துண்டுகளை வைத்து என்ன செய்வது, கட்டிடத்தின் அளவை மாற்றுவதென்பது கொஞ்சம் குழப்பமானது என்று யோசித்துக் கொண்டிருந்த ஃபூ ச்சாய்க்கு அவனது ஆசை நாயகியான சி ஷு, நல்ல மரங்களை நாம் நல்லவிதமாகத்தான் பயன்படுத்த வேண்டும். எங்கள் நாட்டு மன்னன் அளித்த மரங்களை பயன்படுத்தி, கூசு மலையில் இதுவரை யாரும் பார்த்திராத அளவில் மிகப்பெரிய, மிகவும் அகன்ற மேடையை கட்டியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினாள். வூ நாட்டின் மாட்சியை வெளிப்படுத்த வேறு என்ன நாம் செய்யமுடியும் என்று அவள் கூறியதை கேட்டு மகுடிப் பாம்பாய் தலையாட்டினான் அரசன் ஃபூ ச்சாய். இந்த மாபெரும் மேடைக் கட்டிடத்தின் கட்டமைப்புக்காக பல்லாயிரம் மக்கள் பணிபுரிய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

தேவையில்லாமல் உழைப்பு வீணாவதையும், தாங்கள் அவசியமில்லாமல் உழைத்து களைப்பதையும் கண்டு வூ நாட்டு மக்கள் கோபத்திலும், வெறுப்பிலும் புலம்பிக்கொண்டிருந்தனர். இதனிடையில் பிரதேச வல்லாண்மையை வெளிப்படுத்த இன்னுமொரு பெரிய திட்டப்பணியில் முனைப்புடன் மக்களை ஈடுபடுத்தினான் அரசன் ஃபூ ச்சாய். யாங்சு ஆற்றையும், ஹுவாய்ஹெ ஆற்றையும் இணைக்கும் கால்வாய் ஒன்றை அகழும் பணிதான் அது. அதற்கு பின் அதில் தன் படைகளோடு சென்று ச்சி நாட்டை வென்றான். பிறகு, நாடு திரும்பி மேலும் அதிக மக்களை பணித்து, கால்வாயை மேலும் அகலமாகவும், நீளமாகவும் தோண்டச் செய்தான் அரசன் ஃபூ ச்சாய். திட்டப்பணி முடிந்ததும் வூ நாட்டுக்கு சீனாவின் மையச் சமவெளியோடு நேரடியாக இணைக்கும் பாதை கிடைத்தது. ஆனால் நாட்டின் வளங்களெல்லாம் வீணானயின அல்லது செலவழிந்தன. இதையெல்லாம் பார்த்த பல அரசவை அரண்மனை அதிகாரிகளுக்கு அரசனுக்கு அறிவுரை கூறவும், ஆலோசனை சொல்லி நல்வழி படுத்தவும் எண்ணமிருந்து வாய் பேச நா எழவில்லை. மூத்த அமைச்சர் வூ ஸிசியுவையே தலையை பலியாகக் கேட்டு உயிரை நீக்கச் செய்தான் அரசன், நமக்கு எதற்கு வம்பு என்று அவர்கள் வாய் மூடிக்கிடந்தனர்.


இந்நிலையில் ஃபூ ச்சாய் படைகளை திரட்டி ச்சி நாட்டின் மீது தாக்குதல் தொடுக்க புறப்பட்டுச் சென்றான். பலரது முனகல், முகச்சுளிப்புக்கு மத்தியில், நாட்டில் எல்லா வளங்களும் தீர்ந்து கிடந்த தருணத்தில், ஆசை நாயகி சி ஷுவின் புன்சிரிப்பு கலந்த தலையசைவுக்கு மட்டுமே மதிப்பளித்து, அவளது ஆலோசனையின் பேரில் ச்சி நாட்டின் மீது படையெடுத்தான் ஃபூ ச்சாய். அவன் அந்த வழியே செல்ல, இது நாள் வரை காத்திருந்த யுவே நாட்டு மன்னன் குவோ ஜியன் இந்த வழியே வூ நாட்டின் தலைநகரை நோக்கி படையோடு வந்தான். படைகளனைத்து அரசன் ஃபூ ச்சயோடு சென்றிருக்க தலைநகரம் பலவீனமாக நின்றது. கிட்டத்தட்ட தலைநகரம் வரை வூ நாட்டின் எஞ்சிய படையினரை போரிட்டு வெற்றியோடு முன்னேறினான் யுவே நாட்டு மன்னன் குவோ ஜியன்.


மறுபுறம் ச்சி நாட்டின் மீது படைகொண்டு சென்ற ஃபூ ச்சாய் வெற்றியோடு நாடு திரும்பினான். ஆனால் தன்னால் வீழ்த்தப்பட்டு, தனக்கு கீழே நின்று, பின் நல்லுறவுக்காய் கை நீட்டி நின்ற் யுவே நாட்டு மன்னன் தன்னுடைய தலைநகரத்துக்கே படை நடத்தி போரிடுகிறான் என்பதை கண்டு ஃபூ ச்சாய் கொஞ்சம் குழம்பவே செய்தான். இருப்பினும் போர்க்களத்தில் தன் பலத்தை நிரூபிக்கும் வகையில் குவோ ஜியனின் படைகளோடு சண்டையிட்டான் ஃபூ ச்சாய். ஆனால் அவனது சோர்ந்துபோன, மனம் கலங்கிப்போன படையினரால் யுவே நாட்டு படைகளை எதிர்த்து திறமையாக போர்ட முடியவில்லை. வெற்றிக்கு வாய்ப்பே இல்லை என்பதால் குவோ ஜியனிடம் அமைதிக்கொடி நீட்டினான் ஃபூ ச்சாய். களத்தில் ஒரு காலத்தில் தன்னால் வீழ்த்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, தனக்கு கீழே ஒரு குறுநில மன்னனை போல் நின்ற யுவே நாட்டு மன்னன் குவொ ஜியனிடமே இன்று வெள்ளைக்கொடி காட்டி வீடு திரும்பவேண்டிய நிலை வூ நாட்டு அரசன் ஃபூ ச்சாய்க்கு ஏற்பட்டது. அதற்கு பின் ஃபூ ச்சாயின் வூ நாட்டு படைகள் ப்ல இடங்களின் குவோ ஜியனின் யுவே நாட்டுப் படைகளிடம் தோல்வியை தழுவின.


ஒருநாள் ஃபூ ச்சாயின் ஆசை நாயகியும், யுவே நாட்டு மன்னன் கொவோ ஜியனால் அனுப்பப்பட்டு ஃபூ ச்சாய் வீழ்ச்சியடைய சூழ்ச்சி செய்யுமாறு பணிக்கப்பட்டவளுமான அழகி சி ஷு, ஃபூ ச்சாயின் முன் மண்டியிட்டு, அரசே நான் யுவே நாட்டை சேர்ந்தவள்தான், யுவே நாடு தங்களுக்கு எதிராக கிளம்பி துரோகம் இழைத்துவிட்டது, எனவே என்னை கொன்றுவிடுங்கள் என்று ஒரு வாளை அவன் கையில் கொடுத்தாள். அவளின் சூழ்ச்சிதான், கவர்ச்சிதான் தன் தோல்விக்கு வித்து என்றறியாத ஃபூ ச்சாய், அவளை அன்போடு அணைத்து தூக்கி, மடத்தனமாக பேசாதே கண்ணே. உன் மன்னன் செய்த தவற்றுக்கு நீ ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும். யுவே நாட்டின் அனைத்து குடிமக்களையுமே நான் எதிரியாகக் கருதவில்லை. நீ குவோ ஜியனின் மகள் இல்லையே எனவே நீ அவனது தவற்றுக்காய் தண்டிக்கப்படக்கூடாது. இனி இதுபற்றி பேசாதே, வா இருவரும் இந்த மதுவை அருந்துவோம்" என்றான். அதற்கு பின் அரசன் என்ற முறையில் செய்யவேண்டிய கடமைகளையும் புறக்கணித்தும், மதுக்கோபையும், மடியில் மங்கையுமாக பேரழகி சி ஷுவின் அணைப்பில் கிடந்தான் ஃபூ ச்சாய்.