• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-02 09:59:46    
பேரழகி சி ஷு 3

cri

வூ நாட்டை வெல்ல யுவே நாட்டு மன்னனுக்கு உதவிய பேரழகி சி ஷுவை பற்றிய கதை.
ஒரு புறம் தேவையற்ற கட்டுமானப் பணிகள், வீம்புக்காக போர்கள் என நாட்டின் வளங்கள் விரையமாகி, படைகளின் மனநிலையும், உடல்நிலையும் சோர்ந்து, நிலைகுலைந்து கிடக்க, மறுபுறம் கடமை மறந்து ஆசை நாயகியின் மடியில் கிடந்தான் வூ நாட்டு அரசன் ஃபூ ச்சாய். இறுதியில் அவனது ஆசை நாயகியை அனுப்பி வைத்த யுவே நாட்டு மன்னனிடமே அமைதிக்காய் கரம் நீட்டும் நிலை ஃபூ ச்சாய்க்கு ஏற்பட்டது. தனது தலைநகரை கைப்பற்ற யுவே நாட்டு மன்னனோடு, சண்டையிட்டு வெற்றி பெற வாய்ப்பில்லை என்றறிந்து வெள்ளைக்கொடி காட்டி தப்பினான் ஃபூ ச்சாய். அதற்கு பின் ஃபூ ச்சாயின் வூ நாட்டு படைகள் பல இடங்களில் குவோ ஜியனின் யுவே நாட்டுப் படைகளிடம் தோல்வியை தழுவின.
இந்த தோல்விக்கும், இன்ன பிற குழப்பங்களுக்கும் காரணமான சி ஷு அவனிடம் வந்து, தனது நாடான யுவே நாட்டு மன்னன் குவோ ஜியன் படையெடுத்ததற்கு தன்னை தண்டிக்குமாறு கூறியதை, நடிப்பென்றறியாமல், அவளை அரவணைத்து, மது உண்டு, மடியில் தஞ்சமாகக் கிடந்தான் ஃபூ ச்சாய். மறுபுறத்தில், சி ஷுவை வூ நாட்டுக்கு அனுப்பி, ஒரு காலத்தில் தன்னை போரில் வீழ்த்தி, சிறையிலடைத்த வூ நாட்டு அரசன் ஃபூ ச்சாயை பழிதீர்க்க துடித்த யுவே நாட்டு மன்னன் குவோ ஜியன், விடாக்கண்டனாய் ஃபூ ச்சாயை வீழ்த்த அமைச்சர் ஃபான் லி மற்றும் சி ஷுவை அனுப்பும் தந்திர திட்டத்தை தீட்டிய அமைச்சர் வென் ஷுங்குடன் சேர்ந்து தனது படைகளை வூ நாட்டுக்கு எதிராக முழு வீச்சிலான போருக்காக வழிநடத்திச் சென்றான்.


தொடர்ச்சியாக நிகழ்ந்த பல சண்டைகளில், தோல்வியை தழுவிய ஃபூ ச்சாய், தனது படைகளோடு தலைநகருக்கு பின்வாங்கினான். போரில் இனி வெற்றிக்கு வாய்ப்பு இல்லை, யுவே நாட்டு மன்னன் குவோ ஜியனை வீழ்த்த வழியே இல்லை என்று உணர்ந்த ஃபூ ச்சாய், அமைதிக்கு கைநீட்டி, தூதன் ஒருவனை குவோ ஜியனிடம் அனுப்பினான். ஆனால் இந்த முறை குவோ ஜியன் அமைதிக்கு இணங்குவதாயில்லை. அவனுக்குள் தகித்துக்கொண்டிருந்த பழிதீர்க்கும் வேகம், அமைதி நாடிய வூ நாட்டு அரசனுக்கு மறுப்பு சொல்லி அனுப்பவைத்தது. இரு நாட்டு படைகளுக்கும் இடையே வூ நாட்டு அரசனின் தூதுவன் ஏழு முறை அமைதி நாடி சென்று திரும்பியும் பயனில்லை. ஏழு முறையும், மறுத்து அனுப்பினான் யுவே நாட்டு மன்னன் குவோ ஜியன். அதன்பின் தொடர்ந்த சண்டையில் சில காலம் வரை முற்றுகையை, படையெடுப்பை யுவே நாட்டின் தலைநகரம் தாக்கு பிடித்தது. அதன் பின் யுவே நாட்டின் அமைச்சன் போ பி, தலைநகரின் வாயிலை யுவே நாட்டு படைகளுக்கு திறந்துவிட்டு குவோ ஜியனிடம் சரணடைந்தான். எஞ்சிய சில ஆதரவாளர்களோடு, வூ நாட்டு அரசன் ஃபூ ச்சாய், ஷுயாங் மலைக்கு தப்பியோடினான். தன்னை பின் தொடர்ந்து வந்த குவோ ஜியனின் படைகளிடமிருந்து எளிதில் தப்ப இயலாது என்றறிந்த ஃபூ ச்சாய், இப்படியெல்லாம் நடக்கும் என்று, அப்போதே அறிவுரை கூறிய அமைச்சர் வூ ஸிசியுவின் பேச்சை கேளாமல் மதியிழந்து அவரது உயிரையே பலிகேட்ட தன் தவற்றை நினைத்து பார்த்து, வருத்தமடைந்தான். தன்னுடன் வந்த ஆதரவாளர்களிடம், இறந்த பின் மேலோகத்தில் வூ ஸிசியுவின் முன் என் முகத்தை காட்ட முடியாது. தயவு செய்து என் முகத்தை சிறு துணியை வைத்து மூடிவிடுங்கள் என்று கூறி, தன் வாளை எடுத்து தன் கழுத்தை அறுத்துக்கொண்டு உயிர் நீத்தான்.
ஒருவழியாக யுவே நாட்டு மன்னன் குவோ ஜியனின் பழிதீர்க்கும் படலம் எதிரியின் உயிர்நீத்தலோடு முடிந்தது. ஆனால் அவனது சந்தேகக்குணமும், எதிர்மறை சிந்தனையும் மாறவில்லை, நீங்கவில்லை.


அமைச்சர் ஃபான் லி மற்றும் தனக்கு போர் தந்திரத்தை கற்றுக்கொடுத்த அமைச்சர் வென் ஷுங்கின் மீது குவோ ஜியனுக்கு பெருத்த சந்தேகம் எழுந்தது. இதை உணர்ந்துகொண்ட அமைச்சர் ஃபான் லி மன்னன் குவோ ஜியனை விட்டு விலக, தப்பியோட முடிவெடுத்தார். தனது முடிவை மூத்த அமைச்சர் வென் ஷிங்கிடம் கூறி " மன்னன் குவோ ஜியனோடு இருந்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பத்தையும் தான் பெற முடியும், வெற்றியை, மகிழ்ச்சியை அல்ல. எனவே நாம் இங்கிருந்து சென்றுவிடலாம்" என்று அவரை அழைத்தான். ஆனால் வென் ஷுங், மனம் மாறாதவராய் அமைச்சர் ஃபான் லியின் அழைப்பை மறுத்தார். எனவே, மன்னன் குவோ ஜியனிடம் விடைபெறக்கூட யோசிக்காமல் தப்பித்து சென்றார் அமைச்சர் ஃபான் லி.
அதன் பின் ஒருநாள் மன்னன் குவோ ஜியன், மூத்த அமைச்சர் வென் ஷுங்கை அழைத்து "அமைச்சரே, நீங்கள் எனக்கு 7 போர் தந்திரங்களை கற்றுக்கொடுத்தீர்கள். அவற்றில் நான்கை பயன்படுத்தி, வூ நாட்டை அழித்துவிட்டேன். எஞ்சியுள்ள மூன்று தந்திரங்களை நீங்கள் ஏன் இறந்து போன் என் தந்தையிடம் சென்று பரிந்துரை செய்யக்கூடாது?" என்று வினவியபடி, வூ நாட்டு அரசன் ஃபூ ச்சாய், அவனது அமைச்சர் வூ ஸிசியுவின் உயிரை கேட்டு கொடுத்த அதே வாளை, வூ ஸிசியு யுவே நாட்டு படைகள் வூ நாட்டை வெல்லும் என்பதை கட்டியம் கூறி சங்கறுத்து உயிர் நீத்த அதே வாளை, வென் ஷுங்கிடம் நீட்டினான்.


போர் தந்திரங்களை கற்றுக்கொடுத்த, அழகி சி ஷுவை அனுப்பி வூ நாட்டுக்கு உலை வைக்க ஆலோனை கொடுத்த, வேக வைத்த நெல்லை அனுப்பி வூ நாட்டில் உலை வைக்க அரிசியில்லாமல் செய்த. அமைச்சர் வென் ஷுங், இறுதியில், ஃபூ ச்சாயின் அமைச்சர் வூ ஸிசியுக்கு கிடைத்த அதே முடிவை பெற்றார். வாளால் சங்கறுத்து உயிர் நீத்தார் வென் ஷுங்.
அமைச்சர்கள் ஃபான் லியும், வென் ஷுங்கும் தன்னோடு இல்லாதபோது குவோ ஜியனுக்கு, வூ நாட்டை வீழ்த்த உதவிய அழகி சி ஷுவின் நினைவு வந்தது. வூ நாட்டின் தலைநகர் மீதான் முற்றுகையின் போதே தப்பி தலைமறைவான சி ஷுவை குவோ ஜியனின் ஆட்கள் தேடிக் கண்டுபிடித்து அவனிடம் கொண்டு வந்தனர்.
தனது இலக்கை நனவாக்க பேருதவியாக இருந்த சி ஷுவை பார்த்து, நம் நாட்டுக்காக நீ எவ்வளவோ செய்திருக்கிறாய். உனக்கு என்ன வெகுமதி வேண்டும் கேள்" என்று வினவினான். அதற்கு சி ஷு, மன்னா, வூ நாட்டு அரசன் உங்களை சிறையடைத்து அவமானப்படுத்தியதற்கு பழி தீர்க்கவே நான் அந்த நாட்டில் பத்தாண்டுகள் இருந்தேன். எனக்கு அளிக்கப்பட்ட கடமையைத்தான் நான் செய்தேன். எனவே எனக்கு வெகுமதியேதும் வேண்டாம். ஆனால், மீண்டும் என் கிராமத்துக்கே சென்று, நான் பழையபடி பட்டு நூற்கவும், வீட்டுப் பணிகளை செய்யவும் எனக்கு அனுமதியளிக்க வேண்டும்" என்றாள்.


ஆண்டுகள் பல கழிந்தும் சி ஷுவின் பேரழகு கொஞ்சமும் குறையாமல் இருக்க, நாட்டுக்கு வெற்றி தேடித்தந்தும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நின்ற அவளது எளிய குணம் சிலிர்க்க வைக்க, மன்னன் குவோ ஜியன், வூ நாட்டை வெல்வதற்காக தான் விட்டுக்கொடுத்த பேரழகை மீண்டும் தானே உரிமை கொண்டாட முடிவெடுத்தான். தன்னுடைய ஆசை நாயகியாக சி ஷுவை வைத்துக்கொள்ள எண்ணினான்.
இதனிடையில் மன்னனின் இந்த திட்டம் அவனது ராணிக்கு தெரிய வர, கோபமும், பொறாமையும் பொங்கி, சி ஷு வூ அரசனை மயக்கி வீழ்த்தியதை போல, குவோ ஜியனையும் சூழ்ச்சி செய்து வீழ்த்திவிடுவாள் என்ற புரளிகளை கிளப்பிவிட்டாள். பின் நாடு திரும்பிய சி ஷுவை ஒரு தோல் பையில் போட்டி கட்டி, ஆற்றில் மூழ்கடிக்கச் செய்தாள் குவோ ஜியனின் ராணி.
தனது பேரழகால் ஓர் அரசனை நிலைகுலையச் செய்து, ஒரு நாட்டையே வீழ்ச்சியடையச் செய்த சி ஷு கடைசியில் ஒரு மூட்டைக்குள் கட்டப்பட்டு மூழ்கி இறக்கும் சோகமான முடிவுக்கு ஆளானாள்.