• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-08 14:35:36    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: வணக்கம். எமது நிகழ்ச்சிகளை பற்றிய உங்கள் கருத்துக்களின் தொகுப்பாக அமையும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
க்ளீட்டஸ்: கடிதங்கள், மின்னஞ்சல்கள் வாயிலாக தங்களது கருத்துக்களை எழுதியனுப்பிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
கலை: நேயர்களாகிய நீங்கள் அனுப்பும் கடிதங்களே எங்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் தரும் அருமருந்தாகும். எனவே தொடர்ந்து நிகழ்ச்சிகளை பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதியனுப்புங்கள். வந்து சேரும் கடிதங்களை கூடுமானவரை நிகழ்ச்சியில் இணைத்துக்கொள்ள நாங்கள் முயற்சிப்போம்.
க்ளீட்டஸ்: சரி, இனி இன்றைய நிகழ்ச்சிக்கு செல்வோம்.
கடிதப்பகுதி:
கலை: ஈரோடு நேயர் எம். சி. பூபதி எழுதிய கடிதம். அந்தமான் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதை சீன வானொலியின் செய்திகளின் மூலம் அறிந்துகொண்டேன். இயற்கை பேரிடர்கள் மனிதர்களுக்கு இன்னலை தருகின்றன. மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ கற்றுக்கொண்டால் எதிர்காலம் நன்றாக இருக்கும்.
க்ளீட்டஸ்: உங்கள் குரல் நிகழ்ச்சி குறித்து ஆரணி இ. நரேஷ் எழுதிய கடிதம். நாமக்கல்லை சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரை பற்றி நிகழ்ச்சி கேட்டேன். பஞ்சகாவியம் எனும் இயற்கை வேளாண் மூலிகை மருந்தை தயார் செய்த கிராமவாசி ஜெயமூர்த்தி முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களது பாராட்டை பெற்றவர் என்று அறிந்தோம். ஜெயமூர்த்தி அவர்களை பேட்டி கண்ட நேயர் நாமக்கல் நண்பர்களுக்கு நன்றி.


கலை: வெளிநாட்டவரின் பார்வையில் சீனா என்ற நிகழ்ச்சி குறித்து திருச்சி எம். தேவராஜா எழுதிய கடிதம். தமிழ்ப்பிரிவில் பணியாற்றிய முனைவர் ந. கடிகாச்சலம், திரு. ராஜாராம், தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு. தமிழன்பன் ஆகியோரது சீனா பற்றி அனுபவங்களை ஒலியேற்றியது அருமை. நீலச் சீருடை அணிந்த சீனமக்கள் இன்று வண்ணத்துப்பூச்சியாக பல வண்ணங்களில் பவனி வருவதை பார்த்து நானும் மகிழ்கிறேன். ஆனால் இதெல்லாம் மந்திரத்தால் வந்ததல்ல. சீன அரசின் மக்கள் நலக் கொள்கை, சிறப்பான சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை ஆகியவற்றின் நடைமுறையாக்கமே சீனாவின் வளர்ச்சிக்கு காரணம் என்று கருதுகிறேன்.
க்ளீட்டஸ்: நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி குறித்து ஆரணி. பொன். தங்கவேலன் எழுதிய கடிதம். சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் சுவையான உணவுகளை தயாரிப்பது பற்றி குறிப்புகளை கூறி நாவில் நீர் ஊறச் செய்யும் வாணி, புர்றுநோய் பற்றிய தகவல்களை கூறி நடுக்கத்தை ஏற்படுத்திவிட்டார். புற்றுநோய், முடக்குவாதம். கதிரியக்கச் சிகிச்சை என்று பல தகவல்களை கூறினார். இந்நோய் பற்றிய சிகிச்சை முறைகள், ஆய்வுகள் பற்றியும் அறிந்துகொள்ளமுடிந்தது.


கலை: சீன இசை நிகழ்ச்சி குறித்து நெய்வேலி பசுபதி எழுதிய கடிதம். ஜூலை 18ம் நாள் இசை நிகழ்ச்சியில், சீனாவின் தென்மேற்குப் பகுதியைச் சேர்ந்த மக்களின் நாட்டுப்புறப் பாடல்களை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. பாடல்களின் வரிகள் புரியாதபோதும், இசை எனும் அமுதம் எங்கள் செவிகளுக்கு இதமாக இருந்தது.
க்ளீட்டஸ்: திருவாரூர், திருக்கண்ணமங்கை எஸ். கண்ணன் எழுதிய கடிதம். ஆக்ஸ்ட் 5ம் நாள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற முன்னாள் அமெரிக்க அரசுத்தலைவரின் வடகொரியப் பயணம் என்ற செய்தித்தொகுப்பை கேட்டேன். முன்னாள் அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளிண்டன் வடகொரியாவுக்கு தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டது, இரு நாடுகளுக்கிடையில் ஓரளவுக்கு சுமூகமான நிலை தோன்ற உதவக்கூடும்.
கலை: சீனக் கதை நிகழ்ச்சி குறித்து சின்னவளையம் கு. மாரிமுத்து எழுதிய கடிதம். மதுக்கடையின் நாய், கோயில் எலிகள் என்ற தலைப்புகளில் இடம்பெற்ற கதைகளை கேட்டோம். கோயிலில் எலிகள் இருப்பது எப்படி தொல்லையோ அதுபோலத்தான் மன்னனை சுற்றி இருக்கும் தீய மனம் கொண்டவர்களும். அக்கால மன்னர்கள் மட்டுமல்ல, இக்கால தலைவர்களுக்கும் இது பொருந்தும். சுற்றியுள்ள தீயவர்களை நீக்கினால்தான் நன்மைகள் செய்யமுடியும். கருத்தான சீனக் கதை.
க்ளீட்டஸ்: சேந்தமங்கலம் எஸ். எம். ரவிச்சந்திரன் எழுதிய கடிதம். வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம் அவர்கள் தன்னுடைய திபெத் பயணத்தை பற்றி அழகாக பகிர்ந்துகொண்டார். திபெத்தின் தலைநகர் லாசாவில் உள்ள போதலா மாளிகை பற்றி அவர் விளக்கமாக கூறினார். உலக மரபுச் செல்வங்களில் ஒன்றாக அமைந்துள்ள போதலா மாளிகையின் சிறப்பான அம்சங்களை நாங்களே நேரில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்படுமளவுக்கு வழங்கினால் செல்வம். நன்றி.


மின்னஞ்சல் பகுதி:
விழுப்புரம், எஸ். பாண்டியராஜன்
நவசீனாவின் வைரவிழா சிறப்பு நிகழ்ச்சி கேட்டேன். முதல் தலைப்பே •மக்கள் நலனுக்காக• என்று கூறியது மனதை கவர்ந்தது. ஓர் அரசின் உன்னதமான செயல்பாடு மக்கள் நலனாதாகத்தான் இருக்கவேண்டும். அவ்வழியை இன்றும் தொடர்ந்து சீன அரசு செய்து வருவதை சீன வானொலி மூலம் அறிந்து வருகிறேன். இந்த வைரவிழா ஆண்டு சீன மக்களுக்கு நலமான ஆண்டாக இருக்க அன்பான வாழ்த்துக்கள்.
வளவனூர் புதுப்பாளையம், எஸ். செல்வம்
ஆகஸ்டு திங்கள் 21 ஆம் நாள் இடம்பெற்ற •உங்கள் குரல்• நிகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ந்தேன். அமெரிக்காவின் ஆல்பர்ட் பெர்ணான்டோ அவர்களை பாராட்டும் வகையில் சிறப்புக் கூட்டம் நடத்திய நாமக்கல் மாவட்ட சீன வானொலி நேயர் மன்றத்தினருக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அண்மைக்காலமாக, சீன வானொலிக்கு அமெரிக்காவின் ஆல்பர்ட் கடிதம் எழுதவில்லையே என்ற மனக்குறை எனக்குண்டு. ஆனால், விபத்தின் காரணமாகவே அவர் சீன வானொலிக்கு கடிதம் எழுதவில்லை என்பதை அறிந்தபோது ஆறுதலடைந்தேன். திபெத் பயணம் தொடர்பாக, அவரை என்னால் நேரில் சந்திக்க முடியவில்லை. அவர் அடுத்த முறை இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும்போது அவரை சந்திக்க முடியும் என நம்புகின்றேன். சுவையான நிகழ்ச்சி ஒன்றை தயார் செய்த நாமக்கல் மாவட்ட மன்ற நேயர்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


.....மதுரை-20 ஆர்.அமுதாராணி......
திபெத்தின் சமுக பொருளாதார வளர்ச்சிப் பற்றி உண்மையான நிலையை அண்மையில் திபெத்தில் பயணம் மேற்கொண்ட வெளிநாடுகளில் தூதர்கள்குழு, இப்பயணத்தின் மூலம் உண்மையான திபெத்தை பார்த்தாக கூறியது. மேலும் 130கோடி மக்கள் தொகையை கொண்ட சீனாவில் மக்களின் அமைதி சகவாழ்விற்கு சீன அரசு முக்கியத்துவம் கொடுத்து உள்ளது என்பதை அவர்கள் கூறுவதை கேட்டு எங்களாலும் உணரமுடிகிறது. நவீனமான, வளர்ச்சியடைந்த பிரதேசமாக திபெத் மாறிவருகிறது.
...தென்பொன்முடி. தெ.நா.மணிகண்டன்
ஆகஸ்ட் 28ம் நாளன்று உங்கள்குரல் நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட சீன வானொலி அமெரிக்கா ஆல்பட் பெர்னான்டோ அவர்களுக்கு நடத்திய பாராட்டு கூட்ட ஒலிப்பதிவு கேட்டேன். ஆல்பட் பெர்னான்டோ அவர்களின் வாழ்க்கை பயணத்தை அறிந்துகொண்டோம். அமெரிக்காவுக்கு சென்றது. அங்கே தனது வாழ்க்கை அந்நாட்டு மக்களின் வாழ்க்கை ஓட்டம், சீன வானொலி நிகழ்ச்சிகளை தான் கேட்கும் வழிமுறை என்று பலவற்றை நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.


நாகர்கோயில், பிரின்ஸ் ராபட் சிங்
இந்தியாவும் ,சீனாவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உடன்பாட்டில் கூட்டாக செயல்பட தீர்மானித்த முடிவை சீன வானொலி
மூலம் அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைதேன். இதே போல் மேலும் பல துறைகளில் இரு நாடுகளும் ஒன்றாக செயல்பட்டால் ஆசிய கண்டத்தில் முதலாளித்துவ ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்வோரை தடுத்துநிறுத்த முடியும் என்பது உறுதி.
。。。。。。மதுரை-20. என்.ராமசாமி。。。。。。
உடலின் இயக்கத்திற்கு இதயம் மூளை, சிறுநீரகம், நுரையீரல் ஆகியவை மிக முக்கியமானவை. இவற்றில் மூளையும் இதயமும் முதன்மை இடத்தை பெறுகின்றன. உடலில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் மூளையின் கட்டளைப்படியே நிறைவேற்றப்படுகிறது. உடலின் ஏதாவது பகுதிக்கு இரத்தம் போகாமல் இருப்பதால் உருவாகும் நிலையை வாதம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். நமது உடலின் இயக்கத்தை படம் பிடித்து காட்டிய சீன வானெலி தமிழ்ப்பிரிவை பாரட்டுகிறேன்。