தேசிய விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது. எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று எஸ் செல்வம் முதலில் வினா எழுப்பினார்.
சீன மக்கள் குடியரசின் தேசிய விளையாட்டு போட்டி சீனாவின் உள்நாட்டில் மிக உயர்ந்த நிலையான பெருமளவிலான வீரர்கள் கலந்து கொள்ளும் விளையாட்டுப் போட்டியாகும். 1959ம் ஆண்டு செப்டம்பர் 13 முதல் அக்டோபர் 3ம் நாள் வரை சீனாவின் முதலாவது தேசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அதன் பிறகு ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த விளையாட்டுப் போட்டி நடைபெறுவருகிறது.
இப்போட்டி சீனாவின் எந்தெந்த நகரங்களில் எத்தனை விளையாட்டு அரங்குகளில் நடைபெற்றது என்று எஸ் செல்வம் கேட்டுள்ளார்.
முதல் 9 முறை இந்த தேசிய விளையாட்டு போட்டி பெய்ஜிங், ஷாங்காய், குவான்துங் ஆகிய இடங்களில் மாறிமாறி நடைபெற்றது. பின் லியோனிங், சியான்சூ, சிச்செசியாங், ஹூபேய், சான்சீ ஆகிய 5 மாநிலங்கள் பத்தாவது தேசிய விளையாட்டு போட்டியை நடத்த விண்ணப்பம் செய்தன. தீவிரமான போட்டிக்கு பின், சியாங்சூ மாநிலம் பத்தாவது தேசிய விளையாட்டு போட்டியை நடத்தும் உரிமை பெற்றது. 11வது தேசிய விளையாட்டுப் போட்டி அக்டோபர் 16ம் நாள் சான்துங் மாநிலத்தில் நடைபெறவுள்ளது. இதில் 362 போட்டிகள் உள்ளிட்ட 33 வகை விளையாட்டுகள் நடைபெறும். மொத்தம் 381 தங்கப் பதக்கங்கள் வழங்கப்படும். பல்வேறு மாநிலங்களும் இணைந்து 46 பிரதிநிதிக் குழுக்களை விளையாட்டுப் போட்டிக்கு அனுப்பும். 12 ஆயிரம் விளையாட்டு வீரர்கள், 3500 பயிற்சியாளர்கள், 4000 நடுவர்கள் 11வது தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வர்.
சீனாவில் இது வரை தேசிய விளையாட்டுப் போட்டி 10 முறை நடைபெற்றது. அது பற்றிய விவரங்கள் பின் வருமாறு.
முதலாவது தேசிய விளையாட்டுப் போட்டி 1959ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 13 முதல் அக்டோபர் 3ம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது. பத்தாயிரத்துக்கு மேலான விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். 36 விளையாட்டுப் போட்டிகளும் 6 அரங்கேற்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 7 பேர் நான்கு முறை 4 உலக சாதனைகளை முறியடித்தனர்.
இரண்டாவது தேசிய விளையாட்டுப் போட்டி 1965ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்றது. துவக்க விழாவில் 16 ஆயிரம் பேர் இணைந்து மிக பெரிய உடல் பயிற்சி நிகழ்வை அரங்கேற்றினர். மொத்தம் 5014 விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் பங்கெடுத்தனர். 22வகை விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன. 24 பேர் பத்துமுறை 9 உலக சாதனைகளை முறியடித்தனர். 330 வீரர்கள் 469 முறை 130 தேசிய சாதனைகளை முறியடித்தனர்.
மூன்றாவது தேசிய விளையாட்டுப் போட்டி 1975ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்றது. தைவான் மாநிலம் உள்ளிட்ட 31 பிரதிநிதிக் குழுக்கள் இதில் கலந்து கொண்டன. வளர்ந்தவருக்கு 28 விளையாட்டுப் போட்டிகளும் சிறுவருக்கு 8 போட்டிகளும் 6 அரங்கேற்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இருவர் இரண்டு முறை இரன்டு உலக சாதனைகளை சமன் செய்தனர். 49 அணிகளைச் சேர்ந்த 83 வீரர்கள் 197 முறை 62 தேசிய சாதனைகளை முறியடித்தனர்.
நான்காவது தேசிய விளையாட்டுப் போட்டி 1979ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்றது. தைவான் உள்ளிட்ட 31 பிரதிநிதிக் குழுக்களின் 15 ஆயிரத்துக்கு மேலான வீரர்கள் இதில் கலந்து கொண்டனர். 36 அணிகளை சேர்ந்த 204 பேர் 376 முறை 102 தேசிய சாதனைகளை முறியடித்தனர். 2 அணிகளைச் சேர்ந்த 6 பேர் பத்து முறை 5 தேசியளவில் சிறுவர் விளையாட்டுப் போட்டி சாதனைகளை முறியடித்தனர்.
5வது தேசிய விளையாட்டுப் போட்டி 1983ம் ஆண்டு ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. 25 விளையாட்டுப் போட்டிகளும் ஓர் அரங்கேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றன. 31 பிரதிநிதி குழுக்களைச் சேர்ந்த 8943 விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் பங்கெடுத்தனர். இருவர் மூன்று முறை இரண்டு உலக சாதனைகளை முறியடித்தனர். 7 பேர் 12 முறை 9 ஆசிய சாதனைகளை முறியடித்தனர். 38 அணிகளின் 64 வீரர்கள் 142 முறை 60 தேசிய சாதனைகளை முறியடித்தனர்.
6வது தேசிய விளையாட்டுப் போட்டி 1987ம் ஆண்டு சீனாவின் குவாங்சோ நகரில் நடைபெற்றது. இது சீன வரலாற்றில் நடைபெற்ற மிக பிரமாண்டமான விளையாட்டு நிகழ்வாகும். 37 பிரதிநிதிக் குழுக்களைச் சேர்ந்த 7228 வீரர்கள் இறுதிப் போட்டிகளில் கலந்து கொண்டனர். 44 வகை விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன. 10 வீரர்களும் இரண்டு அணிகளும் 17 முறை 15 உலக சாதனைகளை முறியடித்தனர். மூவர் மூன்று முறை மூன்று உலக சாதனைகளை சமன் செய்து வெற்றியை பெற்றனர். 85 வீரர்களும் 14 அணிகளும் 168 முறை 82 தேசிய சாதனைகளை முறியடித்தனர்.
7வது தேசிய விளையாட்டுப் போட்டி 1993ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. நவ சீனா நிறுவப்பட்ட பின் மிக பெரி. உயர் நிலையுடைய தேசிய விளையாட்டுப் போட்டியாக இது திகழ்ந்தது. விடுதலைப் படையின் தொழில் முறை விளையாட்டு சங்கங்கள் உள்ளிட்ட 45 பிரதிநிதிக் குழுக்களின் 4228 விளையாட்டு வீரர்கள் இந்த 7வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்தனர். தவிரவும் 1200 பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். 4 பேர் நான்கு முறை நான்கு உலக சாதனைகளை படைத்தனர். 18 வீரர்களும் 4 அணிகளும் 43 முறை 21 உலக சாதனைகளை முறியடித்தனர். 54 வீரர்களும் ஓர் அணியும் 93 முறை 34 ஆசிய சாதனைகளை உருவாக்கினர். 61 வீரர்களும் 3 அணிகளும் 143 முறை 66 ஆசிய சாதனைகளை தாண்டினர். 130 வீரர்களும் 14 அணிகளும் 273 முறை 117 தேசிய சாதனைகளை உருவாக்கினர்.
எட்டாவது தேசிய விளையாட்டுப் போட்டி 1997ம் ஆண்டு அக்டோபர் 12 முதல் 24ம் நாள் வரை ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. கடந்த நூற்றாண்டின் இறுதியில் சீனாவில் நடைபெற்ற நாடளவிலான மிக பெரிய பன்னோக்க விளையாட்டுப் போட்டி இதுவாகும். மொத்தம் 46 பிரதிநிதிக் குழுக்கள் இதற்காக உருவாக்கப்பட்டன. 7647 விளையாட்டு வீரர்கள் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்தனர். 257 பேர் இடம் பெறும் ஹாங்கான் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் பிரதிநிதிக் குழு இந்க விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக கலந்து கொண்டது.
9வது தேசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் தெற்கில் அமைந்துள்ள நகரான குவாங்சோவில் நடைபெற்றது. முன்னாள் அரசுத் தலைவர் சியாங்சியெமின் துவக்க விவாவில் கலந்து கொண்டார். 8608 விளையாட்டு வீரர்கள் இறுதிப் போட்டிகளில் பங்கெடுத்தனர். அப்போட்டி தரத்தில் சீன விளையாட்டுத் துறையின் உயர் நிலையை அடைந்தது. மொத்தம் 24 பேர் 35 முறை 7 உலக சாதனைகளை முறியடித்தனர். 6 பேரும் ஓர் அணியும் 6 ஆசிய சாதனைகளை ஈட்டிதந்தனர்.
பத்தாவது தேசிய விளையாட்டுப் போட்டி 2005ம் ஆண்டு அக்டோபர் 12ம் நாள் சியான்சூ மாநிலத்தின் தலைநகரான நான்கிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் சர்வதேச ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ரோக் ஆகியோரும் 9986 விளையாட்டு வீரர்களும் துவக்க விழாவில் கலந்து கொண்டனர். 357 போட்டிகள் இடம் பெறும் 42 வகை விளையாட்டுகளில் வீரர்கள் கலந்து கொண்டனர்.
11வது தேசிய விளையாட்டுப் போட்டிக்கான துவக்க விழா 2009ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் சீனாவின் சாங்துங் மாநிலத்தில் துவங்கும். 28ம் நாள் வரை விளையாட்டுப் போட்டிகள் நீடிக்கும். போட்டியமைப்புக் குழுவின் ஏற்பாட்டின் படி மாநிலத்தின் 17 நகரங்களில் போட்டிகள் நடைபெறும். இந்த போட்டிக்கான மங்கள சின்னம்"தாய்சான் மலை மகன்" என்பதாகும். மகனின் வடிவம் தாய்சான் மலைக் கல்லால் உருவாக்கப்பட்டது. கல் என்றால் உயிரின் ஆத்மா என்றும் ஆயுள் என்றும் பொருள். 18 வயதான குடிமக்கள் தன்னார்வத் தொண்டர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். தொழிலறிவையும் நுட்பத் திறனையும் பெற்றவர் தன்னார்வத் தொண்டர் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
|