அரசனுக்கு நெருக்கமாக உள்ள இத்தகைய இழிமதி கொண்டோர் கோயில் எலிகளை போல மட்டுமல்ல, மது விற்பவனின் நாயை போன்றவர்கள் எனலாம். அதை விளக்குகிறேன் என்று தொடர்ந்தார் தலைமையமைச்சர் குவான் ஷுங். ஒரு ஊரில் மதுபானம் விற்பவன் இருவன் இருந்தானாம். அவன் தயாரித்து விற்கும் மது மிகவும் சுவையானது, விலையும் மிக மலிவானதே. ஆனாலும் அவனுக்கு அதிக அளவில் வாடிக்கையாளர்கள் இல்லை. எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. மது விற்பவனுக்கு இதற்கான காரணம் புரியவில்லை. ஏன் சுவையான, விலை மலிவான மதுவை தாம் விற்கும் போதும், வாடிக்கையாளர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்று அவன் குழம்பிக்கிடந்தான். ஒரு நாள் தன் பக்கத்து கடைக்காரனிடம், இது பற்றி முறையிட்டு, ஆலோசனை கேட்டான்.
மது விற்பனையாளனின் புலம்பலை கேட்ட பக்கத்து கடைக்காரன், உன்னிடம் கோபாமான நாய் ஒன்று இருக்கிறதல்லவா, அதுதான் உன் மதுவுக்கு வாடிக்கையாளர்கள் குறைவாக இருப்பதன் காரணம் என்றான். என்னப்ப நீ, நாய் நாய்தான், என்னுடைய சுவையான மது, மதுதான். இந்த இரண்டுக்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது என்று வினவினான் மது விற்பனையாளன். தொடர்பு இருக்கிறது நண்பா என்ற பக்கத்து கடைக்காரன், உன் நாய் மிகவும் கோபமானது, ஆவேசமானது, எப்போதும் குலைத்துக்கொண்டும், உறுமிக்கொண்டிருக்கும் உன் நாயை கண்டதும் மக்கள் எங்கே அது பாய்ந்து தங்களை கடித்து விடப் போகிறது என்று பயப்படும் மக்கள் உன் கடைக்கு வர யோசிக்கிறார்கள். இந்த நாயை நீ கொன்றுபோட்டால் ஒழிய உன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப் போவதில்லை, இதுதான் உண்மை என்றான். அரசே இந்த மது விற்பனையாளனின் நாயை போன்றவர்கள்தான் அரசனுக்கு நெருக்கமாகவுள்ள கெட்ட மதிகொண்டோரும். அவர்களால் தீமையும், கெடுதலுமே கிடைக்குமே ஒழிய நன்மை வந்து சேராது. அதனால்தான் கோயில் எலிகளும், மது விற்பவனின் நாயை போலவும் உள்ள கெட்ட மதிகொண்டோர், ஒரு அரசுக்கும் நாட்டுக்கும் கேடு என்றேன், என விளக்கினார் தலைமையமைச்சர் குவான் ஷுங்.
|