சீன மக்கள் வெளியுறவு கழகம் ஏற்பாடு செய்த சீன-ஐரோப்பிய உத்தி கூட்டாளியுறவு பற்றிய கலந்தாய்வு கூட்டம் 19ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனத் துணைத் தலைமை அமைச்சர் லீ க்ச்சியாங் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார். சர்வதேசச் சமூகத்தில் 2 முக்கிய ஆற்றல்களான சீனாவும் ஐரோப்பாவும், உலக அமைதி, ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு முக்கிய பொறுப்பு ஏற்க வேண்டும். சீன-ஐரோப்பிய உறவை மேலும் வளர்ப்பது, இரு தரப்புகளின் அடிப்படை நலன்களுக்குப் பொருந்திய அதேவேளையில், உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். சீன-ஐரோப்பிய உறவு, சீனாவின் வெளியுறவுகளில் முக்கிய இடம் வகித்து வருகின்றது. கடந்த 60 ஆண்டுகால வளர்ச்சியுடன், அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்புகளும் நெருக்கமான ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளன. லீ க்ச்சியாங் கூறியதாவது உலகின் பலத்துருவ நாடுகள் இணைந்து செயல்படுவதையும், பொருளாதாரத்தை உலக மயமாக்குவதையும் விரைவுப்படுத்துவதிலும் பங்கெடுப்பதிலும் சீனாவும் ஐரோப்பாவும் ஈடுபட்டு வருகின்றன. வாய்ப்புகளும் அறைக்கூவல்களும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலைமையில், இரு தரப்புகளின் பொது நலன்களும் மேலும் விரிவாகி வருகின்றன. ஒத்துழைப்புக்கான தேவையும் அதிகரித்து வருகின்றது என்று அவர் கூறினார். கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு வரும் முன்னாள் பிரான்ஸ் தலைமை அமைச்சர் Jean-Pierre Raffarin இதே கருத்து தெரிவித்தார். பல பிரச்சினைகள் பற்றி சீனாவும் ஐரோப்பாவும் ஒத்த கருத்தை கொண்டுள்ளன. பல தரப்பட்ட அமைதியான உலகை உருவாக்குவதிலும், ஐ.நாவின் சட்டப்பூர்வ அடிப்படையிலான உலகை உருவாக்குவதிலும் இரு தரப்புகளும் ஈடுபட்டு வருகின்றன என்று அவர் கூறினார். இரு தரப்புறவின் வளர்ச்சிக்கு லீ க்ச்சியாங் 3 முன்மொழிவுகளை முன்வைத்தார். ஒன்று, அறைக்கூவல்களைச் சமாளிக்க ஒத்துழைத்து, உலகப் பொருளாதார மீட்சியை விரைவுப்படுத்த வேண்டும். இரண்டு, பயன் தரும் ஒத்துழைப்பை ஆழமாக்கி, பொது நலன் பெற பாடுபட வேண்டும். மூன்று, சம நிலையில் நாடுகளுக்கிடை நம்பிக்கையை அதிகரித்து, இணக்கமான உலகை நனவாக்க வேண்டும் என்று அவர் கூறினார். சீனாவின் தொடர்புடைய அறிஞர்கள், அரசு வாரியங்களின் பிரதிநிதிகள், சீனாவுக்கான முக்கிய ஐரோப்பிய நாடுகளின் தூதர்கள் மற்றும் அதிகாரிகள் முதலியோர் இந்த 2 நாள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
|