
சென் ஹொ என்பவர், சீனாவின் யுன்னான் மாநிலத்து ஜின்நின் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவருடைய தாத்தாவும் தந்தையும் இஸ்லாமிய மதத்தின் புனித இடமான மெக்காவுக்குச் சென்று வழிபாடு செய்தனர். பிரபல இஸ்லாமிய மதக் குடும்பத்தில் பிறந்த அவர், சிறுவயதிலேயே, மேலை நாடுகள் பற்றி ஓரளவு அறிந்துகொண்டார். 1405ஆம் ஆண்டு ஜுன் 15ந் நாள், கடல் பயணம் மேற்கொள்ளுமாறு மன்னர் மிங்சென்சு சென் ஹொவுக்குக் கட்டளை பிறப்பித்தார். அவர் தலைமையில் புறப்பட்ட கடல் பயணக்குழுவில் மாலுமிகள், அதிகாரிகள், படைவீரர்கள், தொழிலாளர்கள், மருத்துவர்கள், மொழி பெயர்ப்பாளர்கள்என்று 27800க்கும் அதிகமானோர் இடம்பெற்றனர். சென் ஹொ கடல் பயணக் குழுவின் செயல்பாடு, சாதனங்கள், அளவு கோல்கள் ஆகியவை, அப்போதைய உலகில் முதன்மையானதாக இருந்தன. சென் ஹொ கடல் பயணக் குழு, சீனாவின் வுச்சியென், குவாங்துங் ஆகியவற்றின் வழியாகவும், வியட்நாமின் நடு பகுதி, சுமத்ராவின் பெத்யாச்சி, இலங்கை, இந்தியாவின் கோழிக்கோடு முதலிய இடங்களின் வழியாகவும் சென்றது.

சென் ஹொவின் முதல் மூன்று கடல் பயணத்தின் போது சென்ற முக்கிய இடங்களில், தென் கிழக்காசியாவின் வியட்நாம், கம்போடியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, மியன்மர், தெற்காசியாவின் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கடலோரப் பிரதேசங்கள் இடம்பெற்றன. சீனத் தூதர் என்ற முறையில் தாம் சென்ற அனைத்து நாடுகளின் கரைகளிலும் சென் ஹொ இறங்கி, பட்டுத்துணி, பீங்கான், தங்கம், வெள்ளி ஆகிய பொருட்களை மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். சென் ஹொவின் கடல் பயணக் குழு இலங்கை சென்றடைந்த போது, இலங்கை அதிகாரிகள், மதக் குருமார்கள், சீன வணிகர்கள் உள்ளிட்ட அங்குள்ள வணிகர்கள் வரவேற்பு அளித்தனர். இலங்கை புத்தர் கோயிலுக்கு சென் ஹொ பொருட்களை வழங்கியதோடு, நினைவுச்சின்னம் ஒன்றையும் நிறுவினார். 500 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த நினைவுச் சின்னம் கண்டுபிடிக்கப்பட்டு, இலங்கையின் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னத்தில் சீன, தமிழ் மற்றும் பாரசீக மொழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சென் ஹொ தமது 4வது முதல் 7வது வரையான கடல் பயணத்தில் சென்ற மிகவும் தொலைவான இடம், ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையாகும். வழியில், சுமத்தரா, இலங்கை, மலேசியா, மலாத்தீவு, சோமாலி முதலிய நாடுகளின் வழியாகச் சென்றார். 28 ஆண்டுகால கடல் பயணத்தில் சென் ஹொ, தென் கிழக்காசியா, தெற்காசியா, ஈரான், அரபு நாடுகள், ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரை மற்றும் செங்கடலைச் சேர்ந்த 30க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பயணம் மேற்கொண்டார். 1 2
|