 ஷாங்சி மாநிலம், சீனாவின் வட பகுதியில் அமைந்துள்ளது. சீனப் பௌத்த மதப் பண்பாட்டு மற்றும் தாவ் மதப் பண்பாட்டு வளர்ச்சியின் முக்கிய தளங்களில் ஒன்றாக இது திகழ்கின்றது. மதப் பண்பாடுகள் பலவிதமானவை. பௌத்த மதக் கட்டடம், சிற்பம், ஓவியம் ஆகியவை இம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. தவிர, ஷாங்சி மாநிலம், சீனப் பௌத்த மதத்தின் தொல் பொருள் களஞ்சியமும் ஆகும். சீனப் பௌத்த மத மரபுச் செல்வங்கள் நிறைந்த இடங்களில் இதுவும் ஒன்று.
பெய்சிங்கிலிருந்து புறப்பட்டு, மேற்கு நோக்கி, புகை வண்டியில் 5 மணி நேரம் பயணமான பின், ஷாங்சி மாநிலத்தின் 2வது பெரிய நகரான தாதொங் சென்றடையலாம். 1500க்கும் அதிகமான ஆண்டு வரலாறுடைய யுன்காங் கற்குகை இருப்பதால், தாதொங் நகரம் சீனாவில் புகழ் பெற்றது. தாதொங் புறநகரின் மேற்கு பகுதியிலுள்ள வூசோ மலையில் அமைந்துள்ள யுன்காங் கற்குகை, மலையில் அகழ்ந்து எடுக்கப்பட்டதாகும். கிழக்கிலிருந்து மேற்கு வரை அதன் நீளம், ஆயிரம் மீட்டர். கி.பி. 460ஆம் ஆண்டு இக்கற்குறை செதுக்கப்பட்டது என்று சீன வரலாற்றுத் தகவல் தெரிவிக்கிறது. தற்போது, இங்கு 53 கற்குகைகள் உள்ளன. இங்குள்ள புத்தரின் உருவச்சிலைகளின் எண்ணிக்கை 51 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இவற்றில் மிகப் பெரிய புத்தர் சிலையின் உயரம் 17 மீட்டர் ஆகும். மிகச் சிறியது, சில சென்டிமீட்டர் மட்டுமே. சீனாவின் மிகப் பெரிய கற்குகைகளில் ஒன்றாகத் திகழும் இவ்விடம், உலகப் புகழ்பெற்ற கலைக்கருவூலமாகவும் திகழ்கிறது. யுன்காங் கற்குகை, அதன் நுட்பமான செதுக்கு வேலைப்பாட்டினால் உலகப் புகழ்பெற்றது. அதன் செதுக்கு வேலைப்பாட்டில் இந்திய பௌத்த மதக் கலையையும் சீனப் பாரம்பரியக் கலையையும் நன்கு இணைந்துள்ளன.

இது பற்றி இத்தாலி பயணி FILOMENA RICCARDA அம்மையார் கூறியதாவது--
"இவ்வளவு பெரிய கற்குகைக் கூட்டங்களை நேரில் பார்ப்பது இதுவே முதல் முறை. மிகவும் வியப்படைகின்றேன். பௌத்த மதச் செதுக்கு வேலைப்பாடு மிகவும் நுட்பமானது. நேர்த்தியானது. சீனப் பௌத்த மதப் பண்பாடு ஈர்ப்புத் தன்மை வாய்ந்தது. வழியில் எனக்குக் களைப்பாக இருந்த போதிலும் இந்தப் புத்தர் சிலைகளைக் கண்டதும் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளன" என்றார் அவர்.

யுன்காங் கற்குகையைப் பார்வையிட்ட பின், மேற்கு நோக்கி ஒரு காரில் ஏறிச் சுமார் 2,3 மணி நேரம் பயணமான பின்னர், ஷாங்சி மாநிலத்தின் மற்றொரு இடமான ஹங்ஷான் மலையைச் சென்றடையலாம். இவ்விடமும் பௌத்த மதத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ள சுற்றுலாத் தலமாகும். ஹங்ஷாங் மலை, அதன் அடிவாரத்தில் கட்டப்பட்ட சிறிய சியெகொங் கோயிலினால் புகழ்பெற்றது. இக்கோயில், மலையில் கட்டித் தொங்கவிடப்பட்டது போல காட்சி தருகிறது. உயரமான கட்டடம் தரையில் கட்டப்படுவது தான் வழக்கம். ஆனால், சியெகொங் கோயில் இதற்கு மாறாக, செங்குத்தான மலையில் கட்டப்பட்டுள்ளது. தோற்றத்தில் ஆபத்தான கட்டடம் போலத் தோன்றும் இக்கோயில், 1400 ஆண்டுகள் பழமையானது.
1 2
|