
ஊற்றுகளுக்கு உள்ளூர் மக்கள் பல்வேறு பெயர்களைச் சூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. நீர்த்தாரை ஊற்று, வயிறு ஊற்று, இதய ஊற்று, இரத்த ஊற்று என்பன அந்தப் பெயர்களில் சிலவாகும். ஒரு சில வினாடிகளுக்கு ஒரு முறை, நீர்த்தரை ஊற்றிலிருந்து வெந்நீர் பீறிடுகிறது. வயிறு ஊற்று நீரில் குளித்தால், செரிமானப் பிரச்சினைகளால் ஏற்படும் நோய்கள் குணமாகின்றனவாம். இதய ஊற்று என்பது, இதயம் போலவே துடிக்கிறதாம். நீரின் சிவப்பு நிறம் காரணமாக, இரத்த ஊற்று என்னும் பெயர் வழங்குகிறதாம். இந்த நீரூற்றுகள் எல்லாம் புனிதமானவை என மக்கள் கருதுகின்றனர். ஊற்றுகளுக்கு அருகே காணப்படும் மரங்களில் வெண்ணிற ரிப்பணக் கட்டி, மரங்களைச் சுற்றிலும் நாணயங்களை வீசுவது, மக்களின் வழக்கம். புத்தரைச் சிறப்பிக்கவே அவர்கள் இவ்வாறு செய்கின்றனர். ஜுன், ஜூலை திங்களில், இதற்கு அருகில் உள்ள இடங்களில் ஆயிரக்கணக்கான வண்ண வண்ணப் பட்டாம்பூச்சிகளைக் காண முடிகிறது. அவை எங்கிருந்து இங்கே வருகின்றன?ஏன் இங்கு வருகின்றன?இந்த இரண்டு வினாக்களுக்கும் இதுவரை விடை கிடைத்தபாடில்லை."மாபெரும் இரகசியமாகவே"நீடிக்கிறது. அல்கஸா பள்ளத்தாக்கிற்கு வடக்கில் ஹோங்ஸான்ஸுய்(HONGSHANZUI) எல்லைச் சாவடி உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2418 மீட்டர் உயரத்தில் இது அமைந்துள்ளது. "பனிக்கடலில் தனிமையான தீவு"என்று இது அழைக்கப்படுகிறது. இந்த உயரமான இடத்திலிருந்து சீனா, மங்கோலியா ஆகிய இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளைக் கண்ணாரக் கண்டு களிக்கலாம். வெகு சிறப்பான இயற்கை அழகு மிகுந்த பூஹாய் கவுண்டி, சீனாவின் பாலைவனச் சோலை எனும் பெருமை பெற்று விளங்குவதில் வியப்பேதுமில்லை. 1 2 3
|