
"நான் சீனாவுக்குப் போகிறேன். அங்கே வேலை செய்ய வரும்படி சீன வானொலி கலையரசி அழைத்திருக்கிறார்" என்று நான் சொன்னதும்.
"கவனமா இருங்க சார், அங்க எல்லாம் குளிர் காலத்துல திடீர் திடீர் என்று நாய்கள் காணாமல் போகும். மறு நாள் காலையில் உங்க சாப்பரட்டு மேஜையில் வந்து உட்கார்ந்திருக்கும் சுவையான உணவாக," என்று பயமுறுத்தியிருந்தார் நண்பர் சேகரன். அவர் தில்லியில் அகில இந்திய வானொலி வெளிநாட்டு ஒலிபரப்பின் சீனப் பிரிவில் அறிவிப்பாளராக வேலை செய்பவர். பாண்டிச்சேரிக்காரர். பீகிங்கில் தங்கியிருந்து சீன மொழி கற்றவர். இப்படிப்பட்ட அனுபவசாலி பொய் சொல்லுவாரா என்ற பயத்துடனே பெய்ச்சிங் வந்து சேர்ந்தேன்.
என்னுடைய பயத்தை சகோதரி வாணியிடம் சொன்ன போது அவர் சிரித்து விட்டார். "பயப்படாதீங்க ராஜா, எல்லா இடத்துலயும் நாய்க்கறி கிடையாது. கொரியா உணவுவிடுதிகளில்தான் கிடைக்கும்" என்றார். நண்பர் சேகரன் சொன்னது பொய் என்பது போல பெய்ச்சிங் தெருக்களில் காலை மாலை எல்லா நேரமும் மக்கள் தங்களது செல்ல நாய்க் குட்டிகளை வாக்கிங் அழைத்துச் செல்வதைக் காண முடிகிறது. விதம் விதமான நாய்க் குட்டிகள்.
சீனாவில் சைவ உணவுக்காரராக இருப்பது ரொம்ப ரொம்பக் கஷ்டம் என்று கூறிக் கொண்டு, ஆட்டையும், கோழியையும் உள்ளே, தள்ளும் வைதீகர்களின் மத்தியல், சில மேலை நாட்டவர்கள் தீவிர சைவங்களாக இருப்பதையும் காண முடிகிறது. உதாரணமாக சீன வானொலி இத்தாலி மொழிப் பிரிவு நிபுணர் பாவ்லோ, ஆங்கிலப் பிரிவில் பணியாற்றும் அமெரிக்கர் ஸ்டீபன்.
1 2
|