
"நீங்க பிறந்து வளர்ந்த பின்னணியைப் பார்க்கும் போது எதனால சைவமா இருக்கிறீங்க? என்ன காரணம்? உங்களால் முடிகிறதா?" என்று கேட்ட போது, "இறைச்சி உணவு எனக்கு விருப்பமில்லே. அதுல சுவையில்லே," என்று பாவ்லோ கூறினார். உடனே நான்,
"தன்னூன் பெருக்கற்கு தான்பிறிது ஊன் உண்பான் எங்கனம் ஆளும் அருள்," என்ற திருக்குறளைச் சொன்னதும்
"அப்படியானால் திருவள்ளுவர் பிறந்த பூமியில் இருந்து வந்த நீங்க ஏன் இறைச்சி சாப்பிடுறீங்க" என்று எதிர்க்கேள்வி போட்டார். நான் சங்கடத்தால் நெளிந்தபடியே, ஒரு போலிச்சிரிப்பு சிரித்தபடி "உங்களுக்கு சைவ உணவைத் தேடிப் பிடிப்பது சிரமமாக இல்லையே," என்றேன். அவர் சிரித்தபடியே,
"ரொம்ப சிம்ப்பிள். எனது உணவை நானே சமைத்துக் கொள்கிறேன்," என்று பெய்ச்சிங்கில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்படும் 6 உணவு விடுதிகளின் முகவரியும் தந்தார்.
இதே கேள்வியை எனது நண்பர் ஜெயக்குமாரிடம் கேட்டேன். அவரும் ஒரு சாகபட்சிணி. அவர் பெய்ச்சிங்கில் யுனெஸ்கோவில் பெரிய அதிகாரி. வாரத்திற்கு 7 நாட்கள் என்றால், அவர் 8 நாட்கள் ஒவ்வொரு நாடாகப் பறந்து கொண்டிருப்பார். அவர் நொந்து நூடுல்ஸாகிச் சொன்னார், "ஐயோ அந்தக் கொடுமையை ஏன் கேக்கிறீங்க. வெறும் சோறும் தயிரும் சாப்பிட்டால் கறி போட்டிருக்காதுன்னு நெனச்சு ஆர்டர் செஞ்சா, சோத்து மேல எதையோ தூவிக் கொண்ணாந்து வைக்கிறான். "என்னடா இது," என்று கேட்டா, "இது இறைச்சி இல்லே, மாட்டுக்கறி," என்கிறான். "இல்லேப்பா, நான் சுத்த சைவம்," என்று சொன்னதும் தட்டை எடுத்துட்டு போய் திரும்ப அதே தட்டைக் கொண்டு வந்து வைக்கிறான். மேலோட்டமா இருந்த கறித்துண்டுகளை எடுத்துப் போட்டுட்டு, அதையே தர்றான். வேற என்ன செய்றது? கஷ்டப்பட்டு தேடி மாட்டுக்கறி துண்டுகளை எடுத்துப் போட்டுட்டு திங்க வேண்டியிருக்கு," என்று புலம்பினார் ஜெயக்குமார். 1 2
|