"அப்... படித்... தான்," அந்த மகன் உறுதியாக, ஆனால் பணிவாகப் பதில் சொன்னான். தனித்து விடப்பட்டது போல அய்கு உணர்ந்தாள். அப்பனுக்கோ வாய்பேச முடியவில்லை. அண்ணன் தம்பிகளுக்கோ வரத் துணிச்சல் இல்லை. வெய் எப்போதுமே அந்தப் பக்கமாத்தான் பேசறார். இப்போ ஏழாவது முதலாளியும் கைவிட்டுட்டார். அவருடைய மகன் இந்தச் சின்னப்பயல் கூட அவர் சொன்னதையே திரும்பச் சொல்றான். குழம்பிப் போய்த் தவித்த அவள், கடைசியாக ஒரு எடுப்பு எடுப்பதெனத் தீர்மானித்தாள்.
"முதலாளி, நீங்க கூடவா?" கண்களில் வியப்பும் ஏமாற்றமும் மின்ன பேசினாள்.
"நாங்க முரட்டுத் தனமானவங்க. விவரம் தெரியாதவங்க. என் அப்பனுக்குத்தான் ஆளுங்களை எடை போடத் தெரியலே. அவருடைய புத்தி மழுங்கிப் போச்சு. கிழட்டு மிருகத்தையும், சின்னப் பிசாசையும் அவங்க மனம் போல செய்ய விட்டுட்டாரு. அவங்க என்ன வேணும் னாலும் செய்வாங்க..."
"பாருங்க முதலாளி, என்ன பேசுறான்னு" அவளுக்குப் பின்னால் அமைதியாக நின்று கொண்டிருந்த சின்னப் பிசாசு, அவளுடைய கணவன் திடீரெனப் பேசத் தொடங்கினான். "ஏழாவது முதலாளிக்கு முன்னாடியே இப்படி எல்லாம் பேசறாளே! வீட்டுல எங்களை பாடாப்படுத்திட்டா. நிம்மதியா இருக்க விடலே. எங்க அப்பனை கிழட்டு மிருகம்னு சொல்றா. என்னை சின்னப் பிசாசு. தேவடியா மகன்னு சொல்றா."
"உன்னை யாரு தேவடியா மகன்னு சொன்னது?" அய்கு வெடித்தாள். பிறகு ஏழாவது முதலாளி பக்கமாகத் திரும்பி, "வெளிப்படையா சில விஷயங்களை நான் சொல்லியாகணும்" இவன் என்னை எப்பவும் அசிங்கமாத்தான் நடத்தியிருக்கான். எப்பவுமே என்னை சிறுக்கி, முண்டைன்னுதான் கூப்பிடுவான். அந்தத் தேவடியாகூட தொடுப்பு வச்சதுக்கு அப்புறம், என்னோட பாட்டன் முப்பாட்டன்களை எல்லாம் திட்ட ஆரம்பிச்சுட்டான். யாரு நல்லவங்க, யாரு கெட்டவங்க, நீங்களே சொல்லுங்க முதலாளி!
அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள். உதடுகள் உலர்ந்து வார்த்தைகள் வற்றின. ஏழாவது முதலாளி கண்களை உருட்டி விழித்தார். குளவி போல ஒட்டிக்கொண்டிருந்த மீசைக்கு நடுவில் இருந்து ஒரு அதட்டல் போட்டார். 1 2
|