"இங்க வா!"
ஒரு கணம் அவளுடைய இதயம் துடிக்க மறந்தது. பிறகு திடீரென வேகவேகமாகத் துடித்தது. போர்க்களத்தில் தோல்விதான். எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. தப்பான காலடி எடுத்துவைத்து தண்ணீருக்குள் விழுந்து விட்டாள். இவளுடைய தப்புத்தான். நீல அங்கியும், கருப்புச் சட்டையும் அணிந்த ஒரு ஆள், ஏழாவது முதலாளி முன்னால் வந்து கம்புபோல விறைப்பாக நின்றான்.
அந்த அறையில் ஒரு கீச்சொலிகூட இல்லை. ஏழாவது முதலாளியின் உதடுகள் மெல்ல அசைந்தன. அவர் என்ன சொன்னார் என்பது யாருக்கும் கேட்கவில்லை. வேலைக்காரனுக்கு மட்டும் கேட்டது. அந்த உத்தரவு அவனுடைய உடம்புக்குள் ஊடுருவி, எலும்பு மஜ்ஜைக்குள் தைத்தது போல. எதையோ கேட்டு பயந்தது போல உடம்பை இரண்டுதடவை சிலிர்த்துக் கொண்டான்.
"சரி, முதலாளி, அப்படியே செஞ்சிடறேன்."
பல எட்டுக்கள் பின்வாங்கி பிறகு திரும்பி நடந்தான்.
ஏதோ எதிர்பாராததது நடக்கப் போகிறது. அதைத் தடுக்கும் சக்தி தனக்கு இல்லை என்பதை அய்கு புரிந்து கொண்டாள். ஏழாவது முதலாளியின் முழு அதிகாரமும் எப்படிப்பட்டது என்பது இப்போதுதான் அவளுக்குத் தெரிந்தது. முதலில் தப்புக் கணக்கு போட்டு விட்டாள். அவசரப்பட்டு முரட்டுத்தனமாக நடந்து கொண்டு விட்டாள். தவறை உணர்ந்து வருந்துவது போல பேசத் தொடங்கினாள்.
1 2
|