மொழியின் தோற்றம் என்று சொன்னதும், தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றியோ, சீன மொழியின் பண்டைய வரலாற்றைப்பற்றியோ அல்லது கிரேக்கம், அரபு மொழிகளின் உருவாக்கத்தைப் பற்றியோ பேசவுள்ளதாகவே நாம் நினைப்போம். ஏதோ ஒரு மொழியை குறித்த தகவல்களை சொல்லப்போகிறார்கள் என்றே நமது எண்ணங்கள் நமக்கு குறிப்புணர்த்தும். ஆனால் இன்றைய நிகழ்ச்சியில் நாம் ஏதோ ஒரு குறிப்பிட்ட மொழியைப் பற்றிய மூலத்தை அறியப்போவதில்லை, மனிதர்களின் மொழி, மனிதன் தனது இனத்தோடு தொடர்புகொள்ள பயன்படுத்திய மொழியின் உருவாக்கம் பற்றிய சில தகவல்களை இன்றைக்கு அறியத் தருகிறோம்.
அறிவியலர்களின் கூற்றின் படியும், பகுப்பின் படியும் மனிதர்கள், விலங்கினக் கூட்டத்தில் ஒரு இனமே. ஆறாவது அறிவு என்ற பகுத்தறிவு கொண்டவன் என்பதே ஒரு சிறப்புத் தகுதியாகக் கொண்டு மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபட்டவன் என்று நாம் சொல்லிக்கொள்கிறோம். இன்னும் சொல்லப்போனால் மேம்பட்டவர்கள், பண்பட்டவர்கள் என்று நமக்கு நாமே அடைமொழிகளை தந்திருக்கிறோம். சமூக அவலங்களை பார்க்கும்போது, மற்ற விலங்குகளிலிருந்து எந்த வகையில் மனிதன் வேறுபட்டான் என்ற கேள்வி பலமுறை எழத்தான் செய்கிறது, என்ன செய்ய.
சரி, விலங்குகளில் மனிதர்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை, ஏறக்குறைய மனிதனை ஒட்டிய குணாம்சங்கள் கொண்டவை என்று சொல்லப்படுபவை சிம்பன்சி, போனோபோ ஆகிய குரங்கினங்களாகும். சிம்பன்சியை நாம் அறிந்திருப்போம் பார்த்திருப்போம் ஆனால் போனோபோவை அவ்வளவாக நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
பரிணாம வளர்ச்சியின் போக்கில் குரங்கினத்திற்கு அடுத்ததாக மனிதன் என்று சொல்கிறது அறிவியல். மனிதர்களை ஒத்த குணாம்சங்களைக் கொண்ட இந்த குரங்குகளைக் கொண்டு நடத்திய ஒரு ஆய்வின் மூலம் மனிதர்களின் மொழி எப்படி தோன்றியிருக்கும் என்பது பற்றிய சில தெளிவுகளை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
பொதுவாக மனிதர்களிடயே பேச்சு மொழியே முதலில் தோன்றியிருக்கும் என்று நாம் நினைக்கலாம். வாய் வழி ஒலி எழுப்பி மற்றவரோடு தொடர்பு கொண்ட மனித இனம் காலப்போக்கில் பேச்சை, பேச்சு மொழியை உருவாக்கியிருக்கும் என்பது தெளிவு. ஆனால் முதலில் மனித இனம் சைகைகளையும், உடல் அசைவுகளின் மூலமான செய்திகளையும்தான் பரிமாறிக்கொண்டிருக்கும் என்பதற்கு ஆதாரமாக, அண்மையில் சிம்பன்சி மற்றும் போனோபோ குரங்குகளைக் கொண்டு நடத்திய ஆய்வின் முடிவாக வெளியிடப்பட்ட தகவல்கள் அமைந்துள்ளன.
1 2
|