
பாய் சுன் லி
ஈரானில், மகளிருக்கான தனித் தீவு மகளிர் மட்டும் வசிக்கக் கூடிய தனித் தீவை உருவாக்க ஈரான் அரசு திட்டமிட்டுள்ளது. துருக்கி எல்லைக்கு அருகேயுள்ள மிகப்பெரிய ஒரிமியெ ஏரியில் 102 தீவுகள் உள்ளன. அதில் ஒன்றான அரிஜூ தீவை, மகளிர் சொர்க்கமாக அமைக்க ஈரான் அரசு திட்டமிட்டுள்ளது. ஆடவர் எவரும் தென்படாத வகையில் உருவாக்கப்படவுள்ள இத்தீவில், போக்குவரத்து வாகனங்கள், ஓட்டல்கள், உணவு விடுதிகள், மருத்துவ மனைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மகளிரே தான் பணியாற்றுவர்.
ஈரானில் மகளிர் மட்டும் புழங்கக் கூடிய கடற்கரைப் பகுதிகளும் பூங்காக்களும் உள்ளன. இத்தகைய இடங்களில் மகளிர் தங்கள் முக்காடுகள் மற்றும் மேலங்கிகளைக் களைந்து விட்டுச் சுதந்திரமாக வலம் வரலாம் என்பது அறியத் தக்கது.
சிங்கத்தின் பிடியிலிருந்து மீண்ட
ஆஸ்திரேலிய பெண் சிம்பாபுவே நாட்டில், கடந்த மார்ச் திங்களில் ஆஸ்திரேலிய இளம் பெண் ஒருவர் சிங்கங்களிடம் சிக்கி, உயிருடன் மீண்ட நிகழ்ச்சி ஒன்று அண்மையில் வெளியாகியுள்ளது.
சிம்பாபுவே நாட்டுக்கான ஆஸ்திரேலிய தூதரகம் ஹராரே நகரில் உள்ளது. 27 வயதான கெம்மா ஹிக்கின்ஸ் அம்மையார் அதில் பணியாற்றுகிறார். அவர் கடந்த மார்ச் 4ஆம் நாள் தனது காதலனுடன் ஹராரே நகருக்கு அருகிள்ள ஒரு வனவிலங்கு சரணாலயத்துக்குச் சென்றார். அங்குள்ள விலங்குகளை அவர்கள் கண்டு களிக்கும் போது, திடீரென்று ஹிக்கின்ஸ் மீது பாய்ந்த ஒரு சிங்கம், அவரைத் தரதரவென இழுத்துச் சென்றது. சிறிது நேரத்தில் பல சிங்கங்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு தாக்கின. அப்போது உடன் இருந்த அவரது காதலனும் வேறு சிலரும் சிங்கங்களை மிரட்டி ஹிக்கின்ஸை மீட்டனர்.

பாய் சுன் லி
உடல் முழுவதும் காயமுற்ற ஹிக்கின்ஸ், தென் ஆப்பிரிக்காவின் பிரிடோரியா நகர மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். சில வாரங்கள் தீவிரச் சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறிய ஹிக்கின்ஸ் தற்போது சொந்த ஊரான ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் ஓய்வு எடுத்து வருவதாக "தி சண்டே டெலிகிராப் "என்ற நாளேடு, செய்தி வெளியிட்டுள்ளது. 1 2
|