
மலை நகரமான Chong Qing
Chong qing மாநகரம், சீனாவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள ஒரு மலை நகரமாகும். இங்கு, மாளிகைகள் வானளாவி நிற்கின்ற நகரக் காட்சிகளையும், வண்ண வண்ண மலர்கள் நிறைந்த புதிய தோட்டப் பிரதேசத்தையும் நீங்கள் கண்டுகளிக்கலாம்.
Chong qing மாநகரத்தின் பழையப் பிரதேசங்களில் Yu zhong பிரதேசம், மிகவும் பிரதிநிதித்துவம் வாய்ந்தது. இங்குள்ள நில அமைவு மேடும் பள்ளமுமாகக் காணப்படுகின்றது. சமவெளிகள் காண்பது அரிது. தொன்று தொட்டு, Chong qing மக்கள், மலைச்சாரலில் வீடுகளைக் கட்டி அமைத்துள்ளனர். அத்துடன், இவ்வீடுகள், அங்குள்ள நில அமைவுக்கு ஏற்றபடி, உயர்ந்தும் தாழ்ந்தும் அமைந்துள்ளன. இதனால், Chong qing, புகழ்பெற்ற மலை நகரமாக மாறியுள்ளது.
நகரின் மையம் பகுதியில் அமைந்துள்ள விடுதலைச் சின்ன வணிக வட்டாரம், Chong qing மாநகரத்தின் செழிப்பான காட்சியை நன்றாகக் காட்டுகின்றது. விடுதலைச் சின்னம், 27 மீட்டர் உயரமுடையது. இது, 1945ம் ஆண்டில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போருக்குப் பின், நிறுவப்பட்டது. இச்சின்னத்தைச் சுற்றி, நான்கு வீதிகள், நான்கு திசைகளுக்கு நீண்டு செல்கின்றன. இங்கு, பேரங்காடிகளும் பிற மாட மாளிகைகளும் நிறைந்து காணப்படுகின்றன. இது, Chong qing மாநகரத்தின் மத்திய வணிகப் பகுதியாகும்.

விடுதலைச் சின்னச் சதுக்கம்
பரபரப்பான விடுதலைச் சின்னச் சதுக்கத்தில், எங்கள் செய்தியாளர் ஒரு முதியவரைச் சந்தித்தார். Chong qing நகரவாசியான அவர், பல ஆண்டுகளாக, வெளி இடத்தில் பணி புரிந்து வந்தார். 1992ம் ஆண்டு Chong qing மாநகரத்திற்குத் திரும்பிய பின், இந்நகரத்தின் மாபெரிய மாற்றங்களைக் கண் கூடாகப் பார்த்தார்.
"நான் திரும்பிய போது தான், பழைய பிரதேசத்தின் சீரமைப்புப்பணி தொடங்கியது. அப்போது உயரமான மாளிகை இல்லை என்று சொல்லலாம். விடுதலைச் சின்னமே, மிக உயரமான கட்டடமாக இருந்தது. தற்போது, இது, உயரம்குறைந்த கட்டடமாக மாறியுள்ளது. விடுதலைச் சின்ன வீதி, மிக அழகானது. இது, சீன மேற்குப் பகுதியின் முதல் வீதி என்று போற்றப்படுகின்றது."
1 2
|