மரம் நடுவதில், கின்னஸ் சாதனை
சுற்றுச் சூழல் பாதுகாப்பில் அதிகக் கவனம் செலுத்தப் பொது மக்களுக்குத் துணை புரியும் பொருட்டு, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில அரசு, கடந்த சூலை 31ஆம் நாளான்று, ஒரு கோடி மரங்கள் நடும் இயக்கத்தை ஏற்பாடு செய்தது.
அணிதிரட்டப்பட்ட விவசாயிகளும் மாணவர்களும் புதிய கின்னஸ் சாதனையை நிகழ்த்தும் முயற்சியுடன், மரம் நடும் இயக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஒரு கோடியே 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டிருப்பதாக இம்மாநிலத்தின் வனத்தொழில் வாரியத் தலைவர் V.N. கார்க் தெரிவித்தார். இப்புதிய சாதனை, கின்னஸ் சாதனை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒரு கோடி மரக்கன்றுகளில் 60 விழுக்காட்டு மரக்கன்றுகள், பல்லாயிரம் விவசாயிகள் மற்றும் மாணவர்களால் நடப்பட்டவை. எஞ்சிய மரக்கன்றுகள், மாநில வனத்தொழில் வாரியத்தைச் சேர்ந்த பணியாளர்களால் நடப்பட்டவை என்று தெரிய வந்துள்ளது.
சவப்பெட்டிகளில், சிகரெட்டுகள்
சிங்கப்பூர் காவற்துறையினர் அண்மையில் மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையில், 33 சவப்பெட்டிகளிலிருந்து 37 ஆயிரம் பெட்டி கள்ளக் கடத்தல் சிகரெட்டுக்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
சிங்கப்பூர் சுங்கத்துறைக்குக் கிடைத்த தகவலின் படி, ஆகஸ்ட் 11ஆம் நாளன்று காவற்துறையினர், ஒரு கிடங்கு மீது அதிரடிச் சோதனை நடத்தினர். அவர்கள் அங்குச் சென்றடைந்த போது, முறையே 32, 37 மற்றும் 55 வயதுடைய ஆண்கள் மூவர், சவப்பெட்டிகளிலிருந்து சிகரெட்டுக்களை எடுத்துக்கொண்டிருந்ததைக் கண்டறிந்தனர். இந்தச் சிகரெட்டுக்களை, இயல்பான ஒழுங்குமுறை மூலம் இறக்குமதி செய்திருந்தால், ஒரு லட்சத்து 88 ஆயிரம் அமெரிக்க டாலர்த் தொகையை, வரியாகச் செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிய வந்துள்ளது.
"சவப்பெட்டிகளில் வைக்கப்பட்ட சிகரெட்டுக்கள் கூட, பறிமுதல் செய்யப்படும்" என்று, கடத்தற்காரர்கள் எதிர்பார்க்கவே இல்லை என சிங்கப்பூர் சுங்கத் துறையின அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 1 2
|