
ஹுவாங் சேங் தே
ஹுவாங் சேங் தே என்பவர், சீனாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள குய் சோ மாநிலத்தின் குய் யாங் நாளேடு நிறுவனத்தின் நிழற்படச் செய்திமுகவர் ஆவார். கடந்த 10 ஆண்டுகளாக, சோதனை பயணம் மேற்கொள்ளவும் பேட்டி காணவும் அவர் பல முறை சீனாவின் மேற்கு பகுதிக்குச் சென்று, பேனா மற்றும் நிழற்படக் கருவியைப் பயன்படுத்தி, மேற்கு பகுதியின் சில இடங்களில் நிகழ்ந்த சுற்றுச்சூழலைச் சீர்குலைக்கும் செயல்களைப் பதிவு செய்து வருகிறார். இதன் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருமாறு அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.
இவ்வாண்டு 53 வயதான ஹுவாங் சேங் தே, பார்ப்பதற்கு தனது வயதை விட இளமையாக காணப்படுகிறார். மெலிந்த உடல் வாகு, நேர்த்தியாக வெட்டப்பட்ட தலைமுடியுடன், பார்க்க திறமையானவராக, ஆற்றல்மிக்கவராக காட்சியளிக்கிறார். குய் யோங் நாளேடு நிறுவனத்தில் 25 ஆண்டுகள் வேலை செய்துள்ள அவர், மூத்த நிழற்படச் செய்திமுகவர் ஆவார். கடந்த நூற்றாண்டின் 80, 90ஆம் ஆண்டுகளில், சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள சில இடங்கள் பொருளாதாரத்தை வளர்த்ததில் ஏற்பட்ட சுற்றுச்சூழலைச் சீர்குலைக்கும் பிரச்சினைகள், அவரின் கவனத்தை ஈர்த்துள்ளன. தொடர்பான நிலைமையைச் சரியாக அறிந்து கொண்டு, சமூகத்தின் மேலதிக கவனத்தைத் தட்டி எழுப்பும் வகையில், மேற்கு பகுதியில் கள ஆய்வு செய்ய அவர் உறுதி பூண்டார்.
"எமது மேற்கு பகுதியின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையுமா இல்லையா என்பது, உயிரின வாழ்க்கைச் சூழல் பிரச்சினையைப் பொறுத்திருக்கிறது. செய்தியாளராக பணி புரிவதில், நேர்மையான ஒருவராக இருப்பதைப் போலவே, ஓரளவு சமூகப் பொறுப்புணர்வு கொண்டவராக இருக்க வேண்டும். எனது முழக்கம் மிகவும் எளிமையானது. அதாவது, புவித் தாயகத்தின் நலத்துக்காக முயற்சி செய்வது. செய்தி பிரச்சாரத்தில் எனது ஆற்றலை வெளிக்கொணர வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்" என்றார் அவர்.
1997ஆம் ஆண்டு, நிழற்படக் கருவியையும் எளிய சில ஆடைகளையும் எடுத்துக் கொண்டு, தனது முதலாவது மேற்கு பகுதி பயணத்தை ஹுவாங் சேங் தே துவக்கினார்.
சீனாவின் மேற்கு பகுதியின் மக்கள் தொகை, நாடு முழுவதன் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியாகும். அதன் நிலப்பரப்பு, சீன நாட்டின் நிலப்பரப்பில் 70 விழுக்காடு வகிக்கிறது. இயற்கை மற்றும் வரலாற்றுக் காரணங்களால், கிழக்கு பகுதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மேற்கு பகுதியின் பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் உள்ளது.
ஹுவாங் சேங் தே பொறுத்த வரை, பயணத்திலான சோர்வும் தனிமையும் பெரிதாகத் தெரியவில்லை. முன்னர் காடுகளாக இருந்த இடங்களில் மொட்டையான மர அடிப்பகுதிகளும், நீர் வற்றிய ஆறுகளும், ஆயர்கள் தலைமுறை தலைமுறையாக வாழும் தாயகத்தை விழுங்கிய பாலைவனமும் என்று கண் முன் கண்ட காட்சிகள் அவருக்கு துயரம் தந்தன.
கைகளிலான பேனா மற்றும் நிழற்படக் கருவியைப் பயன்படுத்தி, தாம் கண்டதையும் கேள்விபட்டதையும் ஹுவாங் சேங் தே பதிவு செய்தார். சில இடங்களில், வாழ்க்கை நிலை மோசமாக இருப்பதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கருத்து அங்குள்ள மக்களுக்கு ஏதுமில்லை. இது அவருக்கு துக்கம் ஏற்படுத்தியது.
1 2
|