உலகின் மிகப்பெரிய விமானம்
உலகின் மிகப்பெரிய பயணியர் விமானமான ஏ 380 ரக விமானம் அண்மையில் சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்தினரால் பயன்பாட்டில் இறங்கியுள்ளது. கடந்த 37 ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய விமானம் என்ற பெருமையைக் கொண்டிருந்த போயிங் 747 ரக விமானம் பொதுவாக 400 பயனியரை ஏற்றிச்செல்லக்கூடிய வசதி படைத்தது. இந்த ஏ 380 ரக விமானமோ 850க்கு மேற்பட்ட பயணியரை சுமந்து செல்லக்கூடிய வசதி கொண்டது. 7 அடுக்கு கட்டிடம் போன்ற உயரமும், ஒரு பக்கத்தில் 70 கார்களை நிறுத்தக்கூடிய அதன் இறக்கைகளின் நீளமும் ஆக இவ்விமானத்தின் அளவை கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே வியப்பில் கண்கள் விரியும். அண்மையில் பயணியர் விமான சேவைக்கு இந்த விமானம் திறந்துவிடப்பட்டது. முன்கூட்டியே ஏல முறையில் இந்த விமானத்தின் முதல் பறத்தலில் செல்ல பலர் சீட்டுகளை வாங்கினர். இரட்டை அடுக்கு கொண்ட இந்த விமான இருக்கை அமைவில் 850 பேருக்கான இருக்கைகளை வைக்கலாம் என்றாலும், 471 பேருக்கான வசதியை மட்டுமே சிங்கப்பூர் விமான சேவை நிறுவனம் செய்துள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால், அதில் 12 சொகுசு அறை வசதி இருக்கை. அதாவது தனிப்பட்ட இருக்கை, படுக்கை வசதிகள் கொண்ட ஒரு சொகுசு அறை போன்ற வசதி. வணிகத்தர பயணச்சீட்டுகளுக்கான இருக்கை வசதி, படுக்கையாக மாற்றிக்கொள்ளக்கூடியது. அளவில் மிகப்பெரிய விமானமென்றாலும், எரிபொருள் பயன்பாட்டுத் திறன் மற்றும் இயங்கும்போதான ஓசை இவற்றில் மிகச் சிறப்பாக மதீப்பீடு செய்யப்படுகிறது இந்த ஏ 380 ரக விமானம்.
தங்கள் பற்களை தாங்களே பிடுங்கும் பிரிட்டன் மக்கள்
பிரிட்டன் மக்கள் சிலர் தங்களின் பற்களை தாங்களே பிடுங்கி கொள்கின்றனர். பல் மருத்துவர்கள் தட்டுபாடு அல்லது அவர்களை நாடுவதிலாகும் அதிக செலவால் இது ஏற்ப்பட்டுள்ளது என திங்கட்கிழமை வெளியான ஆய்வு தெரிவிக்கிறது. நோயாளிகள் மற்றும் பொது சுகாதார பங்கேற்பு ஆணையத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் 5000 நோயாளிகளில் 6 விழுக்காட்டினர் பல் மருத்துவரை நாட முடியாததால் அல்லது அதிக செலவு செய்ய முடியாததால், குறடு மற்றும் பசையால் சுய சிகிச்சை செய்து கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
பிரிட்டன், அரசு சலுகைகொண்ட சேவை மற்றும் விலையுயர்ந்த தனியார் பல் சிகிச்சை என இரண்டு வகை பல் நல சுகாதார அமைப்பை கொண்டுள்ளது. 50 விழுக்காடு பல் மருத்துவர்கள் அரசு சலுகைகொண்ட சேவையை நிறுத்திவிட்டனர். இதன் விளைவாக தனியார் நலக்காப்பீடு கொண்டுள்ள சுமார் 80 விழுக்காடு மக்கள், அரசு சலுகை பெறும் பல் மருத்துவரை கண்டுபிடிக்க முடியாததால் இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 15 விழுக்காட்டு தனியார் நலக்காப்பீடு கொண்ட மக்கள், தரமான சிகிச்சை அடிப்படையில் தங்கள் சிகிச்சையை மேற்கொண்டதாக தெரிவித்தனர். 5 விழுக்காட்டினர் அதிக மருத்துவ செலவால் பல் சிகிச்சையை தவிர்த்ததாக கூறினர்.

இங்கிலாந்தின் வட பகுதியிலுள்ள டன்கேஸீர் இடத்திலுள்ள ஒருவர், தன்னுடைய 14 பற்களை குறடால் பிடுங்கியுள்ளார். லிவர்பூலில் தங்கள் பற்களை தாங்களே பிடுங்கி கொண்ட மூவர் பேட்டி காணப்பட்டனர். 64 வயதான வலேரி ஹால்ஸ்வெர்த் பல்வலி தாங்க முடியாத நேரங்களில், அரசு சலுகை சிகிச்சை தரும் மருத்துவரை கண்டுபிடிக்க முடியாமல், கணவரின் குறடால் தனது ஏழு பற்களை பிடுங்கியதாக கூறினார். பலர் விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சையை தவிர்க்க பல்தாடை உடைவுகளை பசையால் சரி செய்ததாக தெரிவித்தனர்.
இவ்வாய்வு முடிவுகள் பல் சிகிச்சைக்கான தேசிய சுகாதார சேவையமைப்பு பல நோயாளிகளை மோசமாக பாதிக்கிறது என்பதை காட்டுகிறது என்று நோயாளிகள் மற்றும் பொது சுகாதார பங்கேற்பு ஆணையத்தின் தலைவர் ஷரோன் கிராண்ட் தெரிவித்தார். 1 2
|