தள்ளிபோகும் திருமண வயது
 உலகில் பல நாடுகளில் குறிப்பிட்ட வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது சட்டமாக வலியுறுத்தப்பட்டாலும், பொதுவாக மக்கள் திருமணம் செய்யும் வயதை பார்த்தால் வேறு விதமாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் சீனாவில் சராசரியான திருமண வயதை பற்றி அறியும்போது ஆச்சரியமாக தான் இருக்கிறது. பெய்ஜிங்கிலுள்ள ஆண்களின் சராசரி திருமண வயது 28.2 ஆகவும், பெண்களின் வயது 26.1 ஆகவும் உள்ளது. இவை இரண்டும் பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் அதிகரித்துள்ளது என்று சீன சமூக அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு ஷாங்காயிலுள்ள ஆண்களின் சராசரி திருமண வயது 31.1 ஆகவும், பெண்களின் வயது 28.4 ஆகவும் இருந்தது என்று சீன சமூக அறிவியல் கழகம் கூறியது. 2008 ஆம் ஆண்டிற்கான சீன சமூக புள்ளிவிபரங்கள் பற்றிய ஆய்வுகள் மற்றும் கணிப்புகளை கொண்ட இக்கழகத்தின் ஆண்டு புத்தகமான "நீல புத்தகம்" ஷாங்காயிலுள்ள சராசரி திருமண வயது தான் சீனாவில் முதல் நிலை பெறுகிறது என்று தெரிவித்தது. அது 1900 திலிருந்து பெய்ஜிங்கிலுள்ள புதுமண தம்பதியரின் வயதை மீளாய்வு செய்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெய்ஜிங்கிலுள்ள திருமணத்திற்கான ஆண்களின் சராசரி வயது 19.7 ஆகவும் பெண்களின் வயது 18.28 ஆகவும் இருந்ததுள்ளது. புத்தாயிரமாம் ஆண்டின் இறுதியில் அது ஆண்களுக்கு 25.87 ஆகவும், பெண்களுக்கு 24.17 ஆகவும் உயர்ந்துள்ளது. பெய்ஜிங்கிலுள்ளவர்கள் தாமதமாகி திருமணம் புரிந்தாலும் பல மணமுறிவுகளை காண்கின்றனர். 2006 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்ட 24,952 தம்பதியரில் மூன்றில் ஒரு பகுதியினர் மூன்று ஆண்டுகளே தம்பதியராக இருந்துள்ளனர். 52 இணைகளின் திருமணம் ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை என மாநகராட்சி பொதுப்பணி பணியகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அரசு அதிகாரிகளின் ஆற்றல் சேமிப்பு
வேலியே பயிரை மேய்கின்ற நிகழ்வுகளை கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் அரசின் கோட்பாடுகளை கடைபிடித்து மக்களுக்கு முன்மாதிரியாய் விளங்கும் அரசு அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். சீனாவில் அத்தகைய அரசு அதிகாரிகளின் செயல் ஆக்கப்பூர்வமான பயன்களை ஏற்படுத்தியுள்ளது. 2004 முதல் 2007 ஆம் ஆண்டு வரை அரசு அதிகாரிகளின் ஆற்றல் நுகர்வுக்காக செலவி்டப்படும் ஒதுக்கீடு 10 விழுக்காடு குறைந்துள்ளது என்பது மாநகராட்சி அரசுகளால் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பெய்ஜிங் மாநகராட்சி கட்டுமானக்குழு மற்றும் பெய்ஜிங் மாநகராட்சி வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் படி 2006 நவம்பர் முதல் 2007 அக்டோபர் வரை சராசரியாக அரசு அதிகாரி ஒருவருக்கான ஆற்றல் செலவு 3,072.5 கிலோவாட்-மணி என கணக்கிடப்பட்டது. இந்த இரண்டு ஆணையங்களும் 20 மாநில நிறுவனங்களின் 36 அலுவலகக் கட்டிடங்களில் ஆய்வு நடத்தியதில் இவ்வாறு தெரிய வந்துள்ளது. மிகப் பெரிய அரசு அலுவலக கட்டிடங்களில் இத்தகைய தணிக்கை செய்யப்படுவது இதுவே முதல் முறை. மேலும் 2006 நவம்பர் முதல் 2007 அக்டோபர் வரை பேரங்காடிகள் ஆண்டுக்கு ஒரு சதுர மீட்டருக்கு 175.5 கிலோவாட் பயன்படுத்தி மிக அதிக ஆற்றல் நுகர்வோராக இருந்துள்ளன. மருத்துவமனைகள் சராசரியாக ஆண்டுக்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 3.158 டன் தண்ணீர் பயன்படுத்தி மிக அதிக தண்ணீர் நுகர்வோராக இருந்துள்ளன என தெரியவந்துள்ளது.
1 2
|