
 ஆதி மனிதன் விலங்குகளோடு விலங்காகா காட்டில், அலைந்து திரிந்தான். கண்ணில் பட்டதை பறித்து பசியாறினான், சில விலங்குகளை கற்கள் கொண்டும், பின் சில கருவிகளை உருவாக்கி அவற்றை கொண்டு கொன்று ருசி பார்த்தான். உணவுக்கு இப்படி அலைந்து திரிந்த மனிதன் இன்ன பிற இச்சைகளையும் பிற விலங்கினங்களை போலத்தான் நிறைவேற்றினான். மானுடவியல் இப்படித்தான் ஆதி மனிதனை குறிப்பிடுகிறது. என்றைக்கு மனிதன் வேலி என்று ஒன்றை, தனக்கு, தன்னுடையது என்ற நோக்கில் அமைத்தானோ, அன்றே நாகரிகத்தின் தொடக்கம் என்று கூறலாம். பகுத்தறியும் திறனால் மனிதன் பண்பட்டான். இந்த நாகரிகத்தின் வளர்ச்சியே, மனிதப் பண்பாட்டுக்கு வித்திட்டது எனலாம். மனித குல வரலாற்றின், மனித நாகரிகத்தின் முக்கிய மைல்கல்லாக, ஓரிடத்தே அவன் விதையூன்றி, பலன் கண்டதை குறிப்பிடலாம். ஆம், வேளாண் துறையின் தொடக்கம், விவசாயத்தின் ஆரம்பம்தான் அது. விவசாயமும், வேளாண்மையும்தான் மனித குலத்தின் எதிர்காலச் சிந்தனைக்கு முதற்சான்றாக அமைகிறது.
அத்தகைய வேளாண் துறைதான் பொதுவாக எல்லா நாடுகளிலும் மிக முக்கிய துறையாக அமைகிறது. ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவுமேயில்லை என்று குறிப்பிடுவார்கள். உழவன் சேற்றில் கால்வைக்காது போனால், நாம் சோற்றில் கைவைக்க இயலாது என்று கூறுவதும், வேளாண் துறையின் முக்கியத்துவத்தையே குறிக்கிறது.
அந்த வகையில், மிகப் பழமையான வேளாண் நாகரிகங்களில் ஒன்றான சீனாவின் சிறப்பான வேளான் துறையை பற்றி உங்களுக்கு அறியத் தருகிறோம்.
1 2
|