

எழுத்துப்பதிவுகள் ஏதுமில்லாத காலத்தில் சீனாவின் வேளாண்மையும், விவசாயமும் துளிர்விடத் தொடங்கியது. ஒரு பழஞ்சீன கதையொன்று உண்டு. ஷென் நொங் ஷு என்பவரின் கதை அது. சிவப்புப் பேரரசர் அல்லது யான் பேரரசர் என்றும் அழைக்கப்பட்ட ஷென் நொங் ஷு பற்றிய இந்தக் கதை, சீன வேளாண்மையின் துவக்கத்தை பற்றியது. ஷென் நொங் ஷுவின் காலத்துக்கு முன்பாக மக்கள் சிப்பிகள், சிறு விலங்குகள், ஊர்வன மற்றும் காட்டுத் தாவரங்களை உண்டி பசியாறினர். மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டேயிருக்க, உணவுக்கு பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது. எனவே உனவுக்காக வேறு வழிமுறைகளை மக்கள் நாடத் தொடங்கினர்.
ஷென் நொங் ஷுவும் கிடைத்த அனைத்து வகை தாவரங்களையும், மூலிகைகளையும், நச்சுத்தன்மைகொண்ட செடிகளையும் சுவைத்து பார்க்கத் தொடங்கினார். இறுதியில், மனிதனால் உட்கொள்ளக்கூடிய சிலவகை தானியங்களையும், செடிகளையும் அவர் கண்டறிந்தார். பிறகு காலநிலை மற்றும் தட்பவெப்ப நிலை பற்றி அறிந்துகொண்ட அவர், சில விவசாய கருவிகளையும் உருவாக்கினார், கண்டுபிடித்தார். அதன் வழியே சீனாவில் தாவர வளர்ப்பு அல்லது வேளாண்மை உருவானது. ஷென் நொங் ஷுவின் கதை சீனாவில் வேளாண்மை தோன்றியது காலகட்டத்தை அறிய சரியாக உதவவில்லை என்றாலும், நவீன தொல்பொருள் ஆய்வு, சீன வேளாண்மையின் துவக்கம் மற்றும் அதன் தன்மை பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள, நம்பகமான, போதிய சான்றுகளை வழங்கியுள்ளது. 1 2
|