 விழாக்களும் விருந்துகளும் இல்லாத நாடுகளே இல்லை, சமூகங்களே இல்லை. ஒரு சமூகத்தின் பண்பாட்டின் வேரோடு ஊன்றிக்கிடந்து, அச்சமூகத்தின் மக்களுடையை ஒற்றுமையை, மகிழ்ச்சியை, பகிர்தலை அழகாக வெளிப்படுத்துபவை விழாக்கள்தான்.

சீனாவில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. விடுமுறை, விருந்து, புத்தாடை, மகிழ்ச்சி என்பதாக மட்டுமே அமையாமல் பண்டைய பண்பாட்டின் தொடர்ச்சியை, நீள்ச்சியை உணர்த்தும் இந்த விழாக்களில் ஒன்றுதான் நடு இலையுதிர் கால திருவிழா அல்லது நிலவுத் திருநாள். சீனச் சந்திர நாள்காட்டியில் 8வது மாதம், 15ம் நாளன்று, இலையுதிர்காலத்தில் நடுப்பகுதியில் கொண்டாடப்படுவதால், நடு இலையுதிர்காலத்திருவிழா என்று பெயர் பெற்ற இந்த விழா குடும்பங்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடி மகிழும் ஒரு நாளாக போற்றப்படுகிறது. குடும்பத்தினர் அனைவரும் கூடி மகிழ்வதை பெளர்ணமியாய் சிரிக்கும் நிலவின் முழுமை உணர்த்துகிறது. நிலவுத் திருநாளின் மாலைப்பொழுதில், மக்கள் தங்களது குடும்பத்தோடு ஒன்று கூடி, அழகான விளக்குகளை ஏற்றி, இனிப்புகளை உண்டு, பெளர்ணமியாய் கண் சிமிட்டும் முழுநிலவின் அழகை ரசிப்பது வழமை.

பொதுவாக எல்லா திருவிழாக்களுக்கும், பண்டிகைகளுக்கும் பின்னணியில் ஏதாவது ஒரு கதை இருக்கும் அல்லவா. நிலவுத்திருநாளோடு தொடர்புடைய கதையாக நம்மில் பலருக்கும் தெரிந்த ஒரு கதை ச்சங் அர் பற்றிய கதை. கடந்த ஆண்டு நிலவுத்திருநாளன்றைய சிறப்பு நிகழ்ச்சியில் ச்சங் அரின் கதையை நாம் கூறியிருந்தோம். இந்த ச்சங் அர்ரின் கதையே மூன்று நான்கு விதங்களில் கூறப்படுவதுண்டு.
1 2
|