இன்றைய நிகழ்ச்சியில் நிலவுத்திருநாள் அல்லது நடு இலையுதிர்கால திருவிழாவோடு தொடர்புடைய வேறு கதைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

சீனப் பழங்கதைகளின் படி, ஹான் வம்சக்காலத்தில் ஷிஹெ என்ற இடத்தில் வாழ்ந்தவன் வூ காங். அவன் சாகாவரம் பெற்ற ஒருவரிடம் உதவியாளனாய் இருந்து, பின் சாகாவரம் பெறும் வித்தையை, ரகசியத்தை தெரிந்துகொண்டானாம். பின் சாகாவரம் பெற்றவனாய் சொர்க்கத்தில் நுழைந்தான் வூ காங். ஒரு நாள் அவன் சாகாவரம் பெற்றவர்கள் செய்யக்கூடாத ஒரு தவற்றை செய்துவிட்டான். உடனே அவனுக்கு அவனது குரு தண்டனை விதித்தார். தண்டனை என்ன தெரியுமா?

சொர்க்கத்திலிருந்து வெளியேறி நிலவுக்கு செல்லவேண்டும். அங்கே உள்ள ஒரு செர்ரி மரத்தை வெட்டவேண்டும். மரத்தை வெட்டுவது தண்டனையா என்றுதானே கேட்கத் தோன்றுகிறது. வூ காங் வெட்ட வேண்டிய மரம் நிலத்தில் குவாங்ஹான் அரண்மனைக்கு முன் இருந்தது. அதன் உயரம் ஒன்றைரை கிலோ மீட்டருக்கு மேல். மரம் எவ்வளவு உயரமாக இருந்தால் என்ன கோடரி கொண்டு கிழே வெட்டினால் சாயத்தான் வேண்டும் அல்லவா? ஆனால் இந்த மரம் மட்டும் எத்தனை முறை வெட்டி சாய்த்தாலும் மீண்டும் அழகாக விண்ணுயர எழுந்து நிற்கும். ஆக தண்டனையாக இந்த மரத்தை வெட்டிச் சாய்க்கவேண்டும் என்பது என்றுமே நிறைவேற முடியாத செயலாக நீடித்தது. ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் அந்த மரம் வெட்டி வீழத்தப்பட முடியாமல் நிலவின் முதுகில் நின்றுகொண்டிருக்கிறதாம். வூ காங்கும் விடாமல் வெட்டிக்கொண்டிருக்கிறானாம். ஆக சாகாவரம் பெற்றவனாயிருந்தும் தவறிழைத்ததால் கடுமையான ஆனால் பயனே இல்லாத வேலையை தண்டனையாக பெற்றான் வூ காங்.
நிலவில் சாயாத மரத்தை வெட்டும் வூ காங்கின் கொடுமையான தண்டனை பற்றிய கதையை அடுத்து கொஞ்சம் போராட்ட எழுச்சியுடன் கூடிய கதை ஒன்று. இதுவும் நிலவுத்திருநாளோடு, நடு இலையுதிர்காலத் திருவிழாவோடு தொடர்புடைய ஒரு பழங்கதையாகும். 1 2
|