புதிய யுவான் பணநோட்டு



பெய்ஜிங் விளையாட்டுப் போட்டிகளின் நினைவாக சீனா பல்வேறு அழியா நினைவுகளை உருவாக்கியது. சீனாவின் மத்திய வங்கியான மக்கள் வங்கி பெய்ஜிங் ஒலிம்பிக் நினைவாக 10 யுவான் பணநோட்டு வெளியிட்டது. மொத்தம் 6 மில்லியன் 10 யுவான் பணநோட்டுகள் அச்சிடப்பட்டன. தற்போது நடைமுறையிலுள்ள சாதாரண 10 யுவான் பணநோட்டு மென்வெள்ளி நிறமும், கறுப்பும் கலந்து, 140 மில்லிமீட்டர் நீளமும், 70 மில்லிமீட்டர் அகலமும் கொண்டு காணப்படுகிறது. ஆனால் பெய்ஜிங் ஒலிம்பிக் நினைவாக அச்சிடப்பட்ட 10 யுவான் பணநோட்டு மயில்நீலமாக அதாவது பச்சையும் நீலமும் கலந்த நிறத்தோடு, 148.5 மில்லிமீட்டர் நீளமும், 72 மில்லிமீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கிறது.

நோட்டின் ஒரு பக்கத்தில் சீனாவின் முக்கிய அடையாள இடங்களில் ஒன்றான சொர்க்க கோவிலின் பிண்ணணியில், ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறும் முக்கிய அரங்கான பறவைக்கூடும், அதற்கு மேல் பெய்ஜிங் ஒலிம்பிக்கின் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கத்தில் புகழ்பெற்ற வட்டெறி வீரர் டிஸ்கோபோலுஸ் பளிங்கு சிலையும், தடகள வீரர்களின் படங்களும், 2008 என்ற அரேபிய எண்ணும் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதன் வலதுபுறத்தில் மேல்பக்கமாக சீன மக்கள் வங்கி என்ற பெயர் சீன பின்னின், மங்கோலிய, திபெத், உகூர், சுவாங் எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. போலி பணநோட்டுகளை தடுக்க பல அறிவியல் நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
1 2
|