விமானப் பணத்தின்போது விமானத்தில் பழுது ஏற்பட்டுவிட்டால் பயணியரின் உயிரை பாதுகாக்கும் விதத்தில் வான்குடைகள் உள்ளன. வான்குடைகளை உடலில் கட்டிக்கொண்டு குதித்து தப்பித்துவிடலாம். கப்பலில் ஏதாவது விபத்து ஏற்பட்டுவிட்டால் அதில் பயணம் செய்வோரை காப்பாற்றும் விதமாக உயிர் காக்கும் படகுகள் உள்ளன. அதேபோல கார்களில் பயணம் செய்கின்றபோது விபத்து ஏற்பட்டுவிட்டால் உயிர் காக்கும் கருவியாக விபத்துக் காப்புக் காற்றுப்பை பயன்படுத்தப்படுவது, உலக அளவில் மாபெரும் செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது. கார் விபத்து ஏற்பட்டவுடன் காற்றுப்பை ஒன்று விரிவடைந்து, உயிர் சேதத்தை தடுக்கும் விதமாக அமைக்கப்படுகின்றது. 1960 களில் காற்றை பயன்படுத்தி பாதுகாப்பு வசதிகள் வாகனங்களில் பயன்பட தொடங்கினாலும், 1971 யில் தான் மெர்சிடஸ் பென்ஸ் வாகன நிறுவனம் வெற்றிகரமான தொழில்நுட்ப சாதனையை நிகழ்த்தி வெளியே தெரியாமல் உள்ளடக்கப்பட்ட காற்று அமைப்புக்களை வாகனங்களில் பயன்படுத்த தொடங்கியது. 1981 ஆம் ஆண்டு மெர்சிடஸ் பென்ஸ் எஸ் ரக காரில் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப பொருத்தப்படும் கருவியாக விபத்துக் காப்பு காற்றுப்பை மாறியது. தற்போது விபத்துக் காப்புக் காற்றுப்பை உலகளவில் புதிய கார்களின் தரமிக்க ஒரு கருவியாக மாறியுள்ளது.

அடுத்ததாக, பல நாடுகளில் பீர் மதுவகை உடலுக்கு அதிக தீங்கிழைக்காத மதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மது வகைகள் பார்லி, கோதுமை, உலர்ந்த பூக்கள் மற்றும் நீர் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இடைக்கால வரலாற்றில் பசைப் பொருட்கள், மாட்டின் பித்தப்பை மற்றும் பாம்பு நச்சு ஆகியவை பீர் மதுவில் சேர்க்கப்பட்டது. அதிக நாட்கள் கெடாமல் இருக்கவும், போதையை அதிகரிக்கவும் ஐயத்துக்குரிய இப்பொருட்கள் சேர்க்கப்ட்டதாக கூறுகின்றனர். ஆனால் 1516 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் பிரபு குடும்பத்தை சேர்ந்த நான்காம் Wilhelm மற்றும் ஐந்தாம் Ludwig சகோதரர்கள் இத்தகைய ஐயத்துக்குரிய பொருட்களை கொண்டு தயாரிக்கப்டும் பீர் மது வகைகளுக்கு தடையாணை பிறப்பித்தனர். அதன் பிறகு தான் இக்கால பீர் மது வகைகள் தயாரிக்கப்பட்டதாம். இது ஏற்படுத்தும் உலக செல்வாக்கு என்னவென்றால் ஜெர்மனி நாட்டின் பீர் மது சுகாதார சட்டம் தான் இன்றுவரை உலகிலுள்ள பீர் மது வகைகளின் உயர்தரத்தை மதிப்பிடும் அளவுகோலாக உள்ளதே.
1 2 3
|