16ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், மிங் வம்சக்காலத்தில் தற்போதைய ஷாங்காயின் அருகில் இருந்த அந்நாளைய ஒரு சிறிய வட்டத்தை நிர்வகித்த தலைவன் ஒருவன் இருந்தான். ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் பெயர் போனவன் அந்த வட்டத்தலைவன். ஒருமுறை பேரரசின் பிரதிநிதி ஒருவர் இந்த ஊழல் வட்டத்தலைவனின் நிர்வாகத்தை பற்றிய விசாரணை மற்றும் ஆய்வுக்காக வருகிறார் என்ற சேதி வந்தது. அவ்வளவுதான் இந்த வட்டத்தலைவனுக்கு சேதி கேட்டபின் சோகம் அப்பிக்கொண்டது. அதேகாலக்கட்டத்தில் ஷாங்காய்க்கு அருகிலுள்ள சூஷோவில் ஒரு மிகப்பிரபலமான திருடன் இருந்தான். தரையில் மெல்ல நடப்பது போல் சத்தமேதுமின்றி சுவரில் ஏறுவதில் கில்லாடியான அந்தத் திருடன் மிகவும் திறமைசாலி. அவன் சண்டையிடும்போதுகூட பதட்டமில்லாமல், அமைதியாக காணப்படுவான் ஆனால் அவனது கைகள் மின்னல் வேகத்தில் செயல்படும். அது மட்டுமல்ல மனமுடையவன் என்ற பெருமையும் அந்தத் திருடனுக்கு உண்டு. ஆக, ராஜ தூதன், பேரரசின் பிரதிநிதி ஆய்வு செய்ய வருவதை கேள்விப்பட்ட இந்த வட்டத்தலைவன், ஏன் அந்த கில்லாடி திருடனின் உதவியை நாடக்கூடாது என்று எண்ணினான். உடனே சூஷோவுக்கு நிறைய அன்பளிப்புகளோடு ஆள் அனுப்பி அந்தத் திருடனை வரச் செய்தான். பெருமதி கொண்ட அன்பளிப்புகளை கண்டு மகிழ்ச்சியடைந்த திருடன், உடனே வட்டத்தலைவனை சந்திக்க புறப்பட்டு வந்தான். அன்பளிப்புகளுக்கு நன்றி கூறிய திருடன் வட்டத்தலைவனிடம் அவருக்கு ஏதும் உதவி தேவையா, தான் ஏதாவது செய்யவேண்டுமா என்று கேட்டான். அதற்குத்தானே அன்பளிப்போடு ஆள் அனுப்பினார் நம் வட்டத்தலைவர், எனவே திருடனிடம் உன்னிடம் நான் தனியாக பேசவேண்டும் என்று கூறி, அறையிலிருந்த பணியாளர்களை வெளியே அனுப்பிவிட்டு, அவன் அருகே சென்று, இந்த வட்டத்து பேரரசின் சார்பின் ஆய்வு செய்ய பிரதிநிதி வந்துள்ளார். எனக்கென்ன அவர் எனக்கு எதிராக ஏதோ செய்யப்போகிறார் என்று தோன்றுகிறது. எனவே நீ தங்கியிருக்கும் இடத்துக்குச் சென்று, அவர் வைத்துள்ள பேரரசின் முத்திரையை களவாண்டு கொண்டு வா. அரச முத்திரை இல்லாவிட்டால் அவர் எந்த அரச பணியையும் செய்ய முடியாது, அவர் வேலையையும் இழக்க நேரிடும். இதை நீ செய்தால் உனக்கு 100 பொற்காசுகள் தருவேன் என்றார். உடனே திருடன் எந்த சிக்கலுமில்லை, இதோ கொஞ்ச நேரத்தில் கொண்டு வந்து கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றான். அன்றிரவு அவன் சொன்னபடியே பேரரசின் பிரதிநிதி வைத்திருந்த அரச முத்திரையை திருடிக்கொண்டு வந்து, வட்டத்தலைவனிடம் கொடுத்தான். பலே, சொன்னதை சிறப்பாகச் செய்தாய். நல்லது, உன் வேலை முடிந்துவிட்டது, இனி நீ இங்கிருப்பதில் பயனில்லை, நீ கிளம்பு என்றார் வட்டத்தலைவர். திருடன் புறப்படுவதற்கு முன், தலைவரே நீங்கள் தாராள மனதுடன் எனக்கு நன்மை செய்தீர்கள், அதற்கு நன்றி. ஆனால் கிளம்புவதற்கு முன் ஒரு வார்த்தை அறிவுரை கூற விரும்புகிறேன், பேரரசின் பிரதிநிதியின் தங்குமிடத்துக்கு அரச முத்திரை திருடச் சென்றபோது நான் ஒன்றை கவனித்தேன். வீட்டின் உத்திரத்தில் இருந்தபடி, அவர் அலுவலகத்தில் அமர்ந்திருந்ததை பார்த்தேன். அவர் சில ஆவணங்களை கவனமாக பார்த்துக்கொண்டிருந்தார். கொஞ்சம் கூட இடைவெளியில்லாமல் ஆவணங்களை பார்ப்பதும், அதில் குறிப்பு எழுதுவதுமாக அவர் பணிபுரிந்ததை பார்க்கும்போது, அவர் மிகவும் மதிநுட்பமும், திறமையும் நிறைந்தவர் என்று உணரமுடிந்தது. ஆக நீங்கள் ஒரு திறமைசாலிக்கு எதிராக நிற்கிறீர்கள். எனவே நாளை நீங்கள் அரச முத்திரையை அவரிடம் ஒப்படைத்து விடுங்கள், திருடன் எவனிடமோ உங்கள் காவலர்கள் கண்டெடுத்ததாகவும், பிடிப்பதற்கு முன் திருடன் தப்பியோடிவிட்டதாகவும் சொல்லிவிடுங்கள் என்றான். அதற்கு வட்டத்தலைவன், கையில் கிடைத்த இந்த அரச முத்திரையை ஒப்படைப்பதில் எந்த பயனுமில்லை. இந்த முத்திரை அதிகாரத்தின் சின்ன. அவரிடம் இது இருந்தால் எனக்கு எதிராக அவரால் எதையும் செய்யமுடியும், எனவே நீ கிளம்பு, நான் பார்த்துக்கொள்கிறேன் என்றாராம். 1 2
|