
சீனாவின் ஹாய்நான் மாநிலத்தின் முன்னாள் துணை தலைவர் சென் சு ஹொ, 3 ஆண்டுகளுக்கு முன், தமக்கு மிகவும் பழக்கமான நகரை விட்டு, ஒதுக்குப்புறமான தமது ஊருக்குத் திரும்பினார். முன்பு வறுமை நிலையில் இருந்த அந்த சிறு மலை கிராமத்திற்கு, அவர் திரும்பியதினால், தலை கீழான மாற்றம் ஏற்பட்டது.
சுங் மெய் கிராமம், ஹாய்நான் மாநிலத்தின் லின் கௌ மாவட்டத்தின் நான்பௌ வட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஒதுக்குப்புறமான மலை கிராமம். அங்கு, முகத்தில் புன்னகை தவழும் ஒரு முதியவரை மக்கள் அடிக்கடி காணலாம். நீர் புட்டி வைக்கப்பட்ட ஒரு பையை எடுத்து உலாச் செல்ல அவர் விரும்புகிறார். அவர் தான் சென் சு ஹொ. சுற்றுப்புறத்திலுள்ள விவசாயிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அவர் வித்தியாசமானவர் இல்லை. கிராமத்தில் உள்ள 170க்கும் அதிகமான குடும்பங்களைப் போலவே, அவரும் தமது வீட்டுக்கு முன், சீன கோவா, முள்ளங்கி, அவரை உள்ளிட்ட 10க்கு அதிகமான காய்கறி வகைகளை பயிரிடுகிறார்.
வெளித்தோற்றத்தில் பார்த்தால் சாதாரணமாக தெரியும் இந்த முதியவர், ஹாய்நான் மாநிலத்தின் பெரிய விவசாயியாக உள்ளார். ஹாய்நான் மாநிலத்தின் வேளாண் துறைக்குப் பொறுப்பான துணை தலைவராக அவர் 7 ஆண்டுகள் பதவி வகித்தார். பின்னர், ஹாய்நான் மாநிலத்தின் மக்கள் பேரவையின் துணைத் தலைவராகவும் அவர் பணியாற்றினார். 2003ஆம் ஆண்டில் அவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும், மனைவியுடன் தமது ஊருக்குத் திரும்பி, சாதாரண விவசாயியாக மாறினார். தாம் தெரிந்தெடுத்த தொழில் பற்றிக் குறிப்பிடுகையில், விவசாயிகளுடன் தமக்குள்ள நெருக்கமான உணர்வே இதற்கு காரணம் என்று அவர் கூறினார்.
1 2 3
|