
தென்மேற்கு சீனாவின் கு சோ மாநிலத்தில் செள ச்சிங் என்னும் இடம் துங் இனத்தவர்கள் ஒன்று கூடி வாழும் இடங்களில் ஒன்றாகும். தொலைவிலிருந்து பார்க்கும் போது மலைச்சரிவுகளில் அடுக்கடுக்காக வயல்களும், எண்ணற்ற தொங்கு மாடி கட்டிடங்களும் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. இன்றைய நிகழ்ச்சியில், துங் இனக் கிராமத்துக்கு விருந்தினராகப் போகலாமா?
செள ச்சிங் கிராமத்துக்கு வெளியே, தேசிய ஆடை அணிந்த துங் இன இளைஞர்களும், இளம் பெண்களும் விருந்தினர்கள் வருவதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இளைஞர்கள் Lu Sheng என்னும் குழலை ஊதி நடனம் ஆடுகின்றனர். பெண்களோ, துங் இனத்தின் மது வாழ்த்து பாடலைப் பாடுகின்றனர். பாடிக்கொண்டே, விருந்தினர்களுக்கு வீட்டில் தயாரித்த மணம் கமழும் அரிசி மது கோப்பையை வழங்குகின்றனர். துங் இனத்தின் பழக்கத்தின் படி, விருந்தினர்கள், இம்மதுவை குடித்த பின்னரே கிராமத்திற்குள் நுழைய முடியும். எனவே, எமது செய்தியாளரும் இப்பழக்கத்தின் படி அரிசி மதுவை ஒரே மூச்சில் குடித்து முடித்தார்.
துங் இனத்தின் Zhong Zhai என்னும் கிராமத்திற்குச் சென்றால், செம்மையான, அழகான தொங்கு மாடி கட்டிடங்கள் சிறு ஆற்றங்கரையில் சிதறி கிடக்கின்றன. அவற்றுக்கிடையில், ஏரி, குளம், காய்கறிப் பண்ணைகள் காணப்படுகின்றன. ஆற்றங்கரையில் துங் இன பெண்கள் ஆடைகளை துவைக்கின்றனர். ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒலிக்கும் நெசவுத்தறிகளும், கொல்லரின் வெள்ளி நகை செய்யும் ஓசையும் ஒரு இசையாக மாறி, உள்ளத்தை உருக்கும் நாட்டுப்புறப்பாடலாக ஒலிக்கிறது. இது போன்ற இன்னும் நான்கு கிராமங்கள் துங் இன பகுதியில் உண்டு.
இடையிடையே இனிமையான பாட்டொலி கேட்கின்றது. Zhong Zhai கிராமத்தின் நடுப்பகுதியிலுள்ள சதுக்கத்திலிருந்து இப்பாட்டோலி பரவுகின்றது. துங் இனக் கிராமம், அளவில் பெரியதல்ல. பொதுவாக ஓரிரு நூறு குடும்பங்கள் வசிக்கின்றன. ஆனால், ஒவ்வொரு துங் இன கிராமத்திலும் ஒரு சிறு சதுக்கம் கட்டப்பட்டுள்ளது. சதுக்கத்தின் ஒரு பக்கத்தில் உயரமான Gu Lou என்னும் ஒரு வகை கட்டிடம் அமைந்துள்ளது. மறு பக்கத்தில், அகலமான இசை நாடக அரங்கு உண்டு. கிராமத்தில் முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போதெல்லாம், அனைவரும் இங்கு ஒன்று கூடுகின்றனர். அதே வேளையில், துங் இன இளைஞர்களும், இளம் பெண்களும் ஒருவரை ஒருவர் அறிந்து நெருங்கி பழகும் இடமாகவும் இது திகழ்கிறது.
1 2 3
|