உலகில் மிகப்புனிதமானது எது என்று கேட்டால், தாய்மை என்று பொதுவாக சொல்வார்கள். ஒரு சிலர், நட்புதான் உலகிலேயே மிகவும் உன்னதமானது என்று சொல்வார்கள். இளமை ஊஞ்சாலுடும், வாலிப முறுக்கு சிலிர்த்து புடைத்து நிற்கும் நம் இளைஞர்களையும், இளம்பெண்களையும் கேட்டு பாருங்கள். காதல் தெய்வீகமானது என்பார்கள். நட்பு காதலாகி, காதல் இருமனம் இணையும் திருமணமாகி, இரண்டு மூன்றாகும் தாய்மையும் வந்து சேரும். வாழ்க்கையின் உன்னதமான அனுபவம், மக்கட்பேறுதான் என்று குழந்தைக்கு இரண்டு வயது ஆகும் வரை சலிக்காமல்சொல்வார்கள்இரண்டு வயதை தாண்டியதும், பிள்ளை அல்ல தொல்லை என்ற நிலைக்கு மக்கட்பேறு மாறிவிடுவது வேறு கதை. பிறக்கும்போதும் அழுகின்றாய்,இறக்கும்போதும் அழுகின்றாய்ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே என்று கண்ணதாசன் பாடல் ஒன்று உண்டு.மனிதன் அழுது புலம்ப, சோகத்தில் மூழ்கிக் கிடக்க பல காரணங்களை கூறுவார்கள். பணமுடை, கடன் சிக்கல், நல்ல வேலையில்லை, உடலில் தீராத நோய், புரியாத மனைவி, புரிந்துகொள்ளாத கணவன், கீழ்படியாத பிள்ளை, அன்பு காட்டாத தந்தை, துரோகம் செய்த நட்பு இந்த வரிசையில் உலகில் அன்று முதல் இன்று வரை நீங்காமல் இடம்பெற்று, பலரையும் வாட்டும் ஒரு காரணி, காதல் முறிவு அல்லது காதல் தோல்வி.

குடியும் குடித்தனமுமாக வாழலாம் என்று நினைத்தேன், குடியை மட்டுமே கொடுத்துவிட்டு யாருடனோ குடித்தனம் நடத்த போய்விட்டாளே என்று, தாடி வளர்க்காத தேவதாஸ்கள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் நேசிப்பதும், ஸ்வாசிப்பதும் உன் நினைவால் தானே என்று இழந்த காதலனையே நினைத்து மாய உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களும் இல்லாமல் இல்லை.
சங்கக்காலம் முதல் இன்றைய தகவல் தொழில்நுட்ப காலம் வரை, ஆண்களும் பெண்களும் பழகும் முறைகளும், காதல் உருவாகும் சூழலும் மாறினாலும், காதல் என்பது இன்று வரையிலும் இருந்தால் இன்ப உலகம், முறிந்தால் துன்ப நரகம் என்பதாகவே அமைந்து கிடக்கிறது.
1 2 3
|