
உலகில் ஐந்தில் ஒரு தொழிலாளிக்கு நீண்டநேரப் பணி
உலகில் 60 கோடி தொழிலாளர்கள் அல்லது ஐந்தில் ஒரு தொழிலாளி, நீண்ட நேரம் பணி்யாற்றுவதாக, சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட பணி நேரமான வாரத்திற்கு 48 மணி நேரம் என்ற கால அளவைவிட, உலக தொழிலாளர்களில் 22 விழுக்காட்டினர், நீண்ட நேரம் பணியாற்றி வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
50க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதல்முறையாக வளரும் நாடுகளின் கொள்கைகளும், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
வளரும் நாடுகளில் வேலை நேரத்தை குறைப்பதில் முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், ஆய்வின் ஒட்டு மொத்த முடிவுகள், கவலை தருவதாகவே உள்ளன என்று சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பைச் சேர்ந்த மூத்த ஆய்வு அதிகாரி ஜோன் மெஷன்ஜர் தெரிவித்துள்ளார்.
2005ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களின் படி, தொழிலாளர்கள், கூடுதல் நேரம் பணியாற்றும் நாடுகளின் பட்டியலில், பெரு நாடு முதலிடத்தில் இருந்தது. அந்நாட்டில் 50.9 விழுக்காட்டுத் தொழிலாளர்கள், அதிக நேரம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக, தென் கொரியாவில் 49.5 விழுக்காட்டுத் தொழிலாளர்களும், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தானில் முறையே 46.7, 44.4 விழுக்காட்டுத் தொழிலாளர்களும் கூடுதல் நேரம் பணியாற்றுகின்றனர். வளர்ந்த நாடுகளில், கூடுதல் நேரம் பணியாற்றுவோரின் விழுக்காடு, குறைவாக உள்ளது.
1 2 3
|