
இப்படி மணமகளின் காலணியை திருட பல இடங்களில் பலவகை வித்தைகளை விருந்தினர் செய்வதுண்டாம். ச்சியான் என்ற நகரத்தில் அக்காலத்தில் மக்கள், திருமணத்திற்கு முன்பு மணமகள் திருமணம் நடைபெறும் இடத்துக்கு செல்லும் வழியில் வண்டியை வழிமறித்து காலணியை திருடிக்கொண்டு செல்வதுண்டாம். அதற்காக ஒரு சிலர் முன்னாள் இரவே வழியில் மறைந்திருந்து காத்திருப்பதுண்டாம். இப்படி இன்னும் பல சடங்குகளும், வேடிக்கையான நடைமுறைகளும் சீன திருமணங்களின் போது நடப்பது ஒருபுறமென்றால், அவற்றின் நோக்கம் என்னவோ திருமணத்தால் இணையும் இரு மனங்கள் இல்லற வாழ்க்கையை இனிதே துவங்கி, செழிப்போடு வாழவேண்டும் என்பதே.
சரி திருமணங்களை பற்றி, அதில் இடம்பெறும் சடங்குகள், ஆடை அணிகலன்கள், அலங்காரங்கள் முதலியவற்றை பற்றி அறிந்துகொண்டோம். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். ஆணும் பெண்ணும் அன்போடு நல்ல உரிதலோடு வாழ்வது எல்லாம் மேலே சொர்க்கத்து கடவுளர்களின் ஆசியோடுதான் நடக்கும், அவர்கள் முடிவுப்படியே கணவனும் மனைவியுமாக இரண்டு பேர் இணைவது அமையும் என்ற நம்பிக்கையைத்தான், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது வெளிப்படுத்துகிறது. ஆனால், உண்மையில் திருமணங்கள் ஒன்றேல் பெற்றோரின் முடிவுப்படி அல்லது இணையாகவேண்டும் என்ற ஓர் இணையின் முடிவுப்படியே நிச்ச்யமாகின்றன. அந்தவகையில் சீனாவில் திருமணங்கள் எப்படி முடிவாகின்றன, நிச்சயிக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்வோம்.
1 2 3
|