சீனாவின் சின்ஜியாங்கில் மனித உரிமைகளின் மதிப்பு மற்றும் பாதுகாப்புச் சாதனைகள்
2022-09-23 16:13:56

ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் 51ஆவது கூட்டத் தொடரின் போது, சீனாவின் சின்ஜியாங்கின் மனித உரிமைகளின் மதிப்பு மற்றும் பாதுகாப்புச் சாதனைகள் பற்றிய பரப்புரைக் கூட்டம் 22ஆம் நாள் ஜெனீவாவிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்றது. சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் மற்றும் ஜெனீவாவிலுள்ள ஐ.நாவுக்கான சீனப் பிரதிநிதிக் குழு ஏற்பாடு செய்த இக்கூட்டத்தில், 50க்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள், செய்தியாளர்கள், அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் முதலிய 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஐ.நா.வுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதியும் தூதருமான சென் சியு கூறுகையில், சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் எப்போதும் மக்களை முதலிடத்தில் வைத்து, அருமையான வாழ்க்கை மீதான மக்களின் எதிர்பார்ப்பை இலக்காகக் கொண்டு பாடுபட்டு வருகிறது. ஆனால், சில மேற்கத்திய நாடுகள் அரசியல் நோக்கிற்காக சின்ஜியாங்கின் மனித உரிமைச் சாதனைகளை வேண்டுமென்றே புறக்கணித்து சின்ஜியாங் பற்றிய பொய் தகவல்கள் மற்றும் வதந்திகளைத் உருவாக்கிப் பரப்பியுள்ளன. இந்நாடுகள் மனித உரிமைப் பிரச்சினையை அரசியலாக்கி அதனைக் கருவியாகப் பயன்படுத்தி வருகின்றன என்றார்.

பயங்கரவாத எதிர்ப்பு, வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, மனித உரிமைகளின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பில் சின்ஜியாங் ஈட்டியுள்ள சாதனைகளை இக்கூட்டத்தில் கலந்துகொண்ட வளரும் நாடுகளின் தூதரக அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர். சின்ஜியாங் தொடர்பான விவகாரங்களில் சீனாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்து, சின்ஜியாங் விவகாரங்களைச் சாக்குபோக்காக கொண்டு சீன உள்விவகாரத்தில் எந்த விதமான தலையீட்டையும் எதிர்ப்பதாக தெரிவித்தனர்.