இந்தியாவில் முதலாவது ஜி20 ஷெர்பா கூட்டம் துவங்கியது
2022-12-05 18:00:46

இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெறும் முதல் ஜி20 ஷெர்பா கூட்டம், மேற்கு மாநிலமான ராஜஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜி20 அமைப்பின் தலைவர் நாடான இந்தியா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரையிலான நான்கு நாள் கூட்டத்தில், மிக முக்கியமான சில உலகளாவிய பிரச்சினைகள் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெறும் முதல் ஜி20 ஷெர்பா கூட்டம், எதிர்கால கூட்டங்களுக்கான குறிக்கோள்களையும், நிகழ்ச்சி நிரலையும் அமைக்கிறது. மேலும், ஜி20 உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுடன் உலகளாவிய தலையாய நிகழ்ச்சிகள் குறித்து விவாதித்து, ஒன்றிணைப்பதற்கான வாய்ப்பை இந்தியா பெறும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி20 அமைப்பின் தலைவர் பதவியை இந்தியா வியாழன் அன்று முறைப்படி ஏற்றுக்கொண்டது.

அடுத்த ஒரு வருடத்தில் நாடு முழுவதும் 200 கூட்டங்களை இந்தியா நடத்தும். அடுத்த ஜி20 உச்சி மாநாடு புதுதில்லியில் 2023 செப்டம்பர்  9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.