சீன சந்தையை தேர்ந்தெடுப்பது வாய்ப்பாகும்: சீன தலைமையமைச்சர் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் தெரிவிப்பு
2024-01-17 10:53:34

ஜனவரி 16ஆம் நாள் காலை டாவோஸ் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் 2024ஆம் ஆண்டு வருடாந்திர கூட்டத்தில் சீன தலைமையமைச்சர் லி ச்சியாங் கலந்துகொண்டு, சிறப்பு உரை ஆற்றினார். சீனா வாக்குறுதிகளை மதிக்கும் நாடு என்றும், சீன சந்தையை தேர்ந்தெடுப்பது ஆபத்து அல்ல, ஒரு வாய்ப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நம்பிக்கையை மீண்டும் கட்டியமைப்பது, ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, உலக பொருளாதார மீட்சியை ஊக்குவிப்பது ஆகியவற்றில் லி ச்சியாங் ஐந்து முன்மொழிவுகளை முன்வைத்தார். முதலாவது, உலகப் பொருளாதார வளர்ச்சியின் ஆற்றலைச் சிறப்பாகக் கூட்டுவதற்கு, ஒட்டுமொத்த பொருளாதார கொள்கைகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும். இரண்டாவது, சர்வதேச தொழிற்துறையின் வேலை பிரிவு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, வர்த்தக மற்றும் முதலீட்டு தாராளமயமாக்கல் மற்றும் எளிதாக்குதலை ஊக்குவித்து, உலக தொழில் மற்றும் விநியோக சங்கிலியின் நிதானம் மற்றும் மென்மையை பராமரிக்க வேண்டும். மூன்றாவது, சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, மக்களுக்கு மேலும் பயன் அளிக்க தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை ஊக்குவிக்க வேண்டும். நான்காவது, பசுமை வளர்ச்சி ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உலக காலநிலை மாற்றத்தை ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும். ஐந்தாவது, வடக்கு-தெற்கு ஒத்துழைப்பு மற்றும் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பொது நன்மை தரும் உலக பொருளாதாரத்தைக் கட்டியமைக்க வேண்டும்.