இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு
2024-02-16 17:04:28

இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி ஜனவரியில் 3.12 விழுக்காடு  வளர்ச்சியடைந்து 3,692 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது,  கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 3,580 கோடி டாலர்களாக இருந்தது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் ஜனவரியில், பெட்ரோலியப் பொருட்கள், பொறியியல் பொருட்கள், இரும்புத் தாது, மின்னணுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி வளர்ச்சியின் காரணமாக சரக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரியில், சரக்கு மற்றும் சேவைகளை உள்ளடக்கிய நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி சுமார் 6,972 கோடி டாலர்களாக இருந்தது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட 9.28 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது. ஜனவரியில், ஒட்டுமொத்த இறக்குமதி 7,046 கோடி டாலர்களாக இருந்தது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 4.15 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

2023-24 நிதியாண்டில் சரக்கு ஏற்றுமதி, கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்களை விஞ்சும் என்று இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் இஸ்ரார் அகமது கூறினார்.