அமெரிக்காவின் ஆதாரமில்லாத அறிக்கைக்குச் சீனா எதிர்ப்பு
2024-02-26 10:52:01

உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த போது அளித்த வாக்குறுதிகளைச் சீனா நடைமுறைப்படுத்துவது பற்றிய 2023ஆம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் அண்மையில் வெளியிட்டது. உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த போது அளித்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்தியது பற்றி சீனாவின் சாதனைகளை நிராகரித்துள்ளதோடு, சீனாவின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைப்பு முறையும் கொள்கைகளும் உலக வர்த்தகத்துக்குப் பெரும் அறைகூவல்களைக் கொண்டு வந்துள்ளதாக அவ்வறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து சீன வணிக அமைச்சகம் பதிலளிக்கையில், உலக வர்த்தக அமைப்பு மீதான வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதில் சீனா ஈட்டியுள்ள மாபெரும் சாதனைகளை அமெரிக்கா பொருட்படுத்தாமல் செயல்பட்டுள்ளது. அதோடு, சீன சோஷலிசச் சந்தைப் பொருளாதாரத்தின் கட்டமைப்பிலும் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பிலும் சீனா பெற்ற மாபெரும் சாதனைகள் குறித்தும் அமெரிக்கா அவதூறு பரப்பியுள்ளது. மேலும், பலதரப்பு வர்த்தக அமைப்பு முறை மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான சீனாவின் முக்கிய பங்களிப்பையும் அமெரிக்கா நிராகரித்துள்ளது. இவை எல்லாம் அமெரிக்காவின் ஒருதரப்புவாதம் மற்றும் மேலாதிக்க செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இச்செயலைச் சீனா உறுதியாக எதிர்ப்பதாகச் சீன வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது.