உக்ரைனுக்கு உதவி வழங்கும்:ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்
2024-03-09 17:34:08

இவ்வாண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் திங்கள், உக்ரைனுக்கு முறையே 450 கோடி யூரோ மற்றும் 150 கோடி யூரோ மதிப்புள்ள உதவியை ஒப்படைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் செயல் துணை தலைவர் துன்புலோவ்ஸ்ஜிஸ் 8ஆம் நாள் உக்ரைன் தலைநகர் கியேவில் அறிவித்தார்.

உக்ரைன் தலைமையமைச்சர் ஷிமிகாலுடன் இணைந்து நடத்திய கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் துன்புலோவ்ஸ்ஜிஸ் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்ப்பது பற்றிய பேச்சுவார்த்தை கட்டுக்கோப்புக்கான ஆயத்தப் பணியை ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் துவக்கியுள்ளதாகவும், அடுத்த வாரம் பரிசீலனைக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கு இப்பேச்சுவார்த்தை கட்டுக்கோப்பு பற்றிய வரைவு ஆவணத்தை ஒப்படைக்கும் என்றும் தெரிவித்ததாக உக்ரைனின் இன்டேர்ஃபெக்ஸ் (INTERFAX) செய்தி வெளியிட்டது.

2022ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கான விண்ணப்பத்தை உக்ரைன் ஒப்படைத்தது. கடந்த ஆண்டு டிசம்பர் திங்கள், உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தையைத் துவக்குவதாக ஐரோப்பிய பேரவை அறிவித்தது.