துருக்கியும் ஈராக்கும் பாதுகாப்பு கூட்டத்தை நடத்தின
2024-03-12 19:38:43

துருக்கி ராணுவ வட்டாரமும், ஈராக் உள்ளூர் அதிகாரிகளும் மார்ச் 10ஆம் நாள் இரு நாட்டு எல்லைக் கோட்டில் பாதுகாப்பு கூட்டம் நடத்தி, எல்லைக் கோட்டில் பாதுகாப்பை வலுப்படுத்துவது பற்றி விவாதித்தனர் என்று துருக்கி தேசிய பாதுகாப்பு அமைச்சகம் அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஈராக் பாதுகாப்புப் படையுடனான நெருக்கமான ஒருங்கிணைப்புடன் ஈராக்கின் வட பகுதியில் துருக்கி தரப்பு ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது என்று இவ்வறிக்கை தெரிவித்தது.

இவ்வாண்டின் கோடைக்காலத்துக்கு முன் ஈராக்கின் வட பகுதியில் உள்ள குர்டிஷ் தொழிலாளர் கட்சியின் எஞ்சிய ஆயுததாரிகளை முற்றிலும் அழிக்க வேண்டும் என்று துருக்கி அரசுத் தலைவர் ரேசேப் தாயிப் எர்டோகன் மார்ச் 6ஆம் நாள் கூறினார். தொடர்புடைய பகுதியில் ராணுவ வசதி கட்டுமானத்தை துருக்கி வலுப்படுத்தி, குர்டிஷ் ஆயுதப் படைக்கும் வெளியுலகத்துக்கும் இடையேயான தொடர்பைத் துண்டித்து, ஈராக் ராணுவ வட்டாரத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று துருக்கி செய்தி ஊடகம் முன்னதாக தெரிவித்திருந்தது.