4 நீலக் கொடி கடற்கரைகள் சான்றிதழுடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் இலங்கை
2024-03-13 17:11:04

இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக இவ்வாண்டின்  இறுதிக்குள் முதன்முறையாக நான்கு பகுதிகளை நீலக் கொடி கடற்கரைகளாக அங்கீகரிக்கவுள்ளதாக அரச ஊடகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவரின் கூற்றை மேற்கோள்காட்டி டெய்லி நியூஸ் நாளிதழ், தெற்கில் உனவட்டுன மற்றும் பெந்தோட்டவும், கிழக்கில் அருகம்பே மற்றும் பாசிக்குடாவும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நீலக் கொடி கடற்கரைகளாக மாறவிருப்பதாக தெரிவித்துள்ளது.

நீரின் தரம், சுற்றுச்சூழல் மேலாண்மை, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் தகவல் வழங்குதல் உள்ளிட்ட அங்கீகாரம் பெற்ற நீலக் கொடி கடற்கரையாக மாறுவதற்கு மொத்தம் 33 நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வருமானத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது. 2023ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 14.8 இலட்சத்துக்கும் அதிகமாக இருந்தது. இது 2022ஆம் ஆண்டில் இருந்ததைவிட 106.6 விழுக்காடு அதிகமாகும். மேலும், இவ்வாண்டு 23 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை முயற்சிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.