கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் சுற்றுலாவை விரிவுபடுத்த வேண்டும் என இலங்கை அரசுத்தலைவர் வலியுறுத்தல்
2024-03-15 17:41:36

இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த கடற்கரைப் பகுதிகளுக்கு அப்பால் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்கே  வலியுறுத்தியதாக அரசுத்தலைவரின் ஊடகப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தெற்கு இலங்கையின் காலியில் அமைந்துள்ள சூழலியல் பூங்காவை புதன்கிழமை பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரைநிகழ்த்துகையில் மேற்கூறியவாறு ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்தார்.

இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்துவதில் தெற்கு பகுதியின்  முக்கியத்துவத்தை அரசுத்தலைவர் எடுத்துரைத்தார். மேலும், காலியை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் திட்டங்களை பற்றி அவர் சுட்டிக்காட்டினார்.

2023ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 14.8 இலட்சத்துக்கும் அதிகமாக இருந்தது. இது 2022ஆம் ஆண்டில் இருந்ததைவிட 106.6 விழுக்காடு அதிகமாகும். மேலும், இவ்வாண்டு 23 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை முயற்சிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.