சிஏஏ பற்றி அமெரிக்காவின் கருத்தை நிராகரித்த இந்தியா
2024-03-16 18:39:20

இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறையாக்கம் பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளரின் கருத்துக்கு இந்திய அரசு கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளது.

சிஏஏ நடைமுறையாக்கம் கவலை அளிப்பதாகவும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்காவின் கூற்று தவறானது, நியாயப்படுத்த முடியாது என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருந்தார்.

சிஏஏ என்பது குடியுரிமை வழங்குவதுதானே தவிர, குடியுரிமையை ரத்து செய்வது அல்ல. இதன்மூலம் நாடற்றவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படுவதுடன் அவர்களின் மனித உரிமைகளுக்கு ஆதரவு அளிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.