ஹைதியில் வாழும் இந்தியர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு மையம்
2024-03-17 18:51:04

ஹைதி நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறையைச் சூழலைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இந்தியர்களுக்கு உதவும் விதம் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஹைதியில் குற்றவாளி கும்பல்களின் வன்முறை அதிகரித்துள்ள சூழலில், அந்நாட்டுத் தலைமை அமைச்சர் ஏரியல் ஹென்றி, பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இச்சூழலில், அங்குள்ள சுமார் 100 இந்தியர்களுக்கு உதவும் விதம் இக்கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அவர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தேவையெனில், அங்கிருந்து மீட்கப்படுவர் என்றும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

ஹைதியில் இந்தியாவுக்கு தூதரகம் இல்லாத சூழலில், டொமினிக் குடியரசு நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மூலம் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.