இலங்கையில் உள்ள 16 லட்சம் மாணவர்களுக்கு பள்ளி உணவுத் திட்டம்
2024-03-26 16:54:01

இலங்கையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையான அனைத்து பள்ளிகளை சேர்ந்த 16 லட்சம் மாணவர்கள், இவ்வாண்டு இலவச காலை உணவு வழங்கும் பள்ளி உணவுத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கையின் அரசுத்தலைவர் ஊடகத்துறை திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. இத்திட்டம் 9,134 அரசுப் பள்ளிகளிலும், 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளிலும் திங்களன்று தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் துவக்க விழாவில் இலங்கை அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்கே உரை நிகழ்த்திய போது கூறுகையில், நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கான கல்வி பாடங்கள் மற்றும் ஊட்டச்சத்து ஆதரவு ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய பாடத்திட்டம் மற்றும் முழுமையான கல்வியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். 

"ஆரோக்கியமான சுறுசுறுப்பான தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 பள்ளி உணவுத் திட்டம் மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும், தினசரி வருகை விகிதத்தை அதிகரிக்கவும், ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களை வளர்க்கவும், கல்வி செயல்திறனை உயர்த்தவும் மற்றும் உள்ளூர் சமையல் மரபுகளை மேம்படுத்தவும் துணைபுரியும் என்று இலங்கையின் அரசுத்தலைவர் ஊடகத்துறை தெரிவித்துள்ளது.