பாலியிலிருந்து இந்தியாவுக்கு விமான சேவை
2024-03-31 15:43:48

இந்தோனேசியாவின் பாலி தீவின் குராஹ் ராய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பெங்களூருக்குச் சென்று வரும் புதிய விமான சேவையைத் தொடங்கியுள்ளதாக அவ்விமான நிலைய பொது மேலாளர் ஹண்டி ஹெர்யுதிடியாவன் தெரிவித்தார்.

வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா திகழ்கிறது என்றும் இப்புதிய சேவையின் மூலம் பாலிக்கு வருகை தர விரும்பும் இந்தியர்களுக்கு எளிமையாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் முதலாவது விமானமாக 183 பயணிகளுடன் இன்டிகோ விமானம் பாலியில் தரையிறங்கியது. பின்பு, அங்கிருந்து 11.20 மணி அளவில் 162 பயணிகளுடன் பெங்களூர் புறப்பட்டது.

கடந்த இரு மாதங்களில் 67,979 இந்திய சுற்றுலாப் பயணிகள் பாலி தீவுக்குச் சென்றுள்ளனர். இந்த தரப் பட்டியிலில் ஆஸ்திரேலியா, சீனாவை அடுத்து இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது.