சீன-அமெரிக்க வணிக வர்த்தகச் செயற்குழுவின் முதல் துணை அமைச்சர் நிலை கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்றது
2024-04-05 19:46:57

அமெரிக்க தரப்பின் அழைப்பை ஏற்று, சீன வணிகத் துறை அமைச்சகத்தின் சர்வதேச வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதியும் துணை அமைச்சருமான வாங் ஷொ வன் ஏப்ரல் 2முதல் 5ஆம் நாள் வரை அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டு வருகின்றார். அப்போது, அவர் அமெரிக்க வணிக அமைச்சகத்தின் துணை அமைச்சர் மரிசா லாகோவுடன் இணைந்து, சீன-அமெரிக்க வணிக வர்த்தகச் செயற்குழுவின் முதல் துணை அமைச்சர் நிலை கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கினார். சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற சந்திப்பிலும் சமீபத்திய தொலைபேசி உரையாடலிலும் இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒத்த கருத்துக்கள் பற்றியும், ஒன்றுக்கொன்று அக்கறை கொண்ட வணிக மற்றும் வர்த்தக கொள்கை பிரச்சினைகள் முதலியவை பற்றியும் இரு தரப்பும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இரு நாட்டு வணிகத் துறை அமைச்சகங்களும் இரு நாட்டு தொழில் நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பை வைக்க விரும்புகின்றன. இரு நாடுகளில் நடைபெறும் வர்த்தக முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை கூட்டாக ஆதரிக்கிறது என இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. மேலும், வர்த்தகத்தை எளிமைப்படுத்துதல், ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு முதலிய பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

இதனிடையில், சீனத் தரப்பின் அழைப்பை ஏற்று, 2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அமெரிக்க வணிக அமைச்சகத்தின் துணை அமைச்சர் மரிசா லாகோ பிரதிநிதிக் குழுவை வழிநடத்தி, சீன-அமெரிக்க வணிக வர்த்தகச் செயற்குழுவின் இரண்டாவது துணை அமைச்சர் நிலை கூட்டத்துக்காக சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.