இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு சொத்துக்கள் கடந்த மார்ச் மாதத்தில் 9.5 சதவீதம் அதிகரிப்பு
2024-04-06 16:54:58

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு சொத்துக்கள் கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது மார்ச் மாதத்தில் 9.5 சதவீதம்  அதிகரித்து 4.95 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளதாக  அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

2022 ஏப்ரலில் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்துவதாக இலங்கை அறிவித்தபோது, அதன் அந்நிய செலாவாணி  கையிருப்பு சுமார் 1.8 பில்லியன் டாலர்களாக இருந்தது. தொடர்ந்து  அந்நிய செலாவணி பற்றாக்குறை  பிரச்சினையை சந்தித்தது.

2022 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டின் ஜுன் மாதம் வரையிலான காலாண்டுகளில், தொடர்ச்சியாக பொருளாதார சுருக்கங்களை  சந்தித்தது.

முன்னதாக இலங்கையின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின்  மூன்றாம் காலாண்டில் இருந்து மீட்சியடைந்து வருவதாக இலங்கை அரசு தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டில் இலங்கை 2-3 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச நிதி நிறுவனங்கள் கணித்துள்ளன.